அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு – இன்று தீர்ப்பு வழங்குகிறது தூத்துக்குடி நீதிமன்றம்!
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறை முறையீட்டு மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கிறது தூத்துக்குடி நீதிமன்றம். சொத்து குவிப்பு வழக்கில் தங்களையும் மனுதாரராக இணைத்துக்கொள்ள கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று வழங்கப்பட உள்ளது. அதிமுக ஆட்சியின் போது வருமானத்துக்கு அதிகமாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ரூ.4.90 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2006ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புதுறை கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது. தூத்துக்குடி முதன்மை குற்றவியல் சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. இதையடுத்து, அனிதா ராதாகிருஷ்ணன் மீது மாநில லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை அடிப்படையாக வைத்து, 2020-ஆம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்காக அமலாக்கத்துறை பதிவு செய்தது.
மேலும், சொத்துகுவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கக்கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் 80% விசாரணை முடிந்த நிலையில், அமலாக்கத்துறை தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இவ்வழக்கு விசாரணை கடந்த 19ம் தேதி தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மகன்கள் நீதிமன்றத்தில் ஆஜரானர். இந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் தங்களையும் மனுதாரராக இணைத்துக்கொள்ள கோரி அமலாக்கத்துறை மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.