ஆந்திர முதல்வரின் பேச்சு தமிழக மக்களை கவலையடைய செய்துள்ளது – ஓபிஎஸ்
ஆந்திர மாநில முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு எதிராக பேசியிருக்கிறார் என்றால் அதனை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது எதிர்க்கட்சிகளின் கடமை என ஓபிஎஸ் அறிக்கை.
பாலாற்றின் குறுக்கே அனுமதியின்றி இரண்டு புதிய நீர்த்தேக்கங்களை கட்ட நடவடிக்கை எடுக்கவிருக்கும் ஆந்திர அரசின் செயல்பாட்டினை உடனடியாக தடுத்து நிறுத்தி, கனகநாச்சியம்மன் திருக்கோயில் அருகே இருக்கும் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் சேமிக்கும் அளவை அதிகரிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை புறநகர் மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவைக்கும், விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்கும் பாலாற்றிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நீரின் அளவைக் குறைக்கும் வகையில், அண்மையில் ஆந்திர மாநிலம் குப்பத்தில் அம்மாநில முதலமைச்சர் அவர்கள் பேசியுள்ளது தமிழ்நாட்டு மக்களை மிகவும் கவலையடையச் செய்துள்ளது.
கர்நாடக மாநிலத்தோடு காவேரி தண்ணீர் திறந்து விடுவதில் பிரச்சனை மற்றும் மேகதாது பிரச்சினை; கேரள மாநிலத்தோடு முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடி வரை தேக்கி வைத்துக் கொள்வதில் உள்ள ‘ரூல் கர்வ்’ பிரச்சினை என்ற வரிசையில் தற்போது பாலாற்றில் ஆந்திர மாநிலத்தோடு புது பிரச்சினை எழுந்திருக்கிறது.
மாண்புமிகு ஆந்திர மாநில முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு எதிராக பேசியிருக்கிறார் என்றால் அதனை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது எதிர்க்கட்சிகளின் கடமை. இதன் அடிப்படையிலும், கர்நாடகாவில் அணைகள் கட்டப்பட்டது போன்ற நிலைமை ஏற்படக்கூடாது என்பதன் அடிப்படையிலும் இந்தப் பிரச்சனையை நான் அரசின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
மேலும், இது சாதாரண பத்திரிகைச் செய்தி அல்ல, ஆந்திர முதலமைச்சரின் பேச்சு பத்திரிகையில் செய்தியாக வெளி வந்திருக்கிறது. இதற்கு எதிர்வினை ஆற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு. ஆந்திர மாநில முதலமைச்சருடன் நல்லுறவு வைத்திருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இது குறித்து அவருடன் பேசி, மேற்படி இரண்டு அறிவிப்புகளையும் ரத்து செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தமிழ்நாட்டு மக்களின் எண்ணத்தினை பூர்த்தி செய்யும் வகையில், கனகநாச்சியம்மன் திருக்கோயில் அருகே இருக்கும் பாலாறு நீர்த்தேக்கத்தில் தண்ணீர் சேமிக்கும் அளவை அதிகரிப்பதையும், குடிப்பள்ளி மற்றும் சாந்திபுரத்தில் இரண்டு நீர்த்தேக்கங்கள் கட்ட இருப்பதையும் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
பாலாற்றின் குறுக்கே அனுமதியின்றி இரண்டு புதிய நீர்த்தேக்கங்களை கட்ட நடவடிக்கை எடுக்கவிருக்கும் ஆந்திர அரசின் செயல்பாட்டினை உடனடியாக தடுத்து நிறுத்தி, கனகநாச்சியம்மன் திருக்கோயில் அருகே இருக்கும் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் சேமிக்கும் அளவை அதிகரிக்க உரிய நடவடிக்கைகளை எடுத்திடுக! pic.twitter.com/kpsnOheAAI
— O Panneerselvam (@OfficeOfOPS) September 27, 2022