அன்புமணி vs ராமதாஸ் : “உனக்கு விருப்பம் இல்லைனா அவ்வளவு தான்”..மேடையில் நடந்தது என்ன?
திடீரென பாமக கட்சியில் இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ள காரணத்தால் யார் பக்கம் செல்லலாம் என நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளனர்.
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில், சுங்கச்சாவடி அருகிலுள்ள சங்கமித்ரா திருமண அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டார்கள்.
இந்த கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டில் கட்சி மேற்கொண்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டு, 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, இளைஞரணி தலைவர் நியமனம் தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மேடையில் இருவரும் மாறி மாறி என்ன பேசிக்கொண்டார்கள் என்பது பற்றிபார்ப்போம்.
ராமதாஸ் ” மாநில இளைஞர் அணித் தலைவராக பரசுராமன் முகுந்தனை அறிவிக்கிறேன். அன்புமணிக்கு உதவியாக செயல்படுவார்” என கூறினார். அதற்கு ராமதாஸ் ” எனக்கா என சிரித்தபடி கேட்டார். அதற்கு ஆமாம் என ராமதாஸ் பதில் கூறினார்.
ராமதாஸ் சொன்ன முடிவை ஏற்றுக்கொள்ளமுடியாமல் அன்புமணி ” எனக்கு வேண்டாம் கட்சியில் அவர் கடந்த 4 மாதத்துக்கு முன்னாடி வந்திருக்கிறார். இளைஞர் அணித் தலைவர் பதவிக்கு அவனுக்கு என்ன அனுபவம் இருக்கிறது. நல்ல திறமையான அனுபவசாலியை அந்த பதவிக்கு நியமனம் செய்யுங்கள்” என கூறினார்.
இதனால் கடுப்பான ராமதாஸ் ” யாராக இருந்தாலும் நான் சொல்வதைதான் கேட்கணும். கேட்கவில்லை என்றால் யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது, இது நான் உண்டாக்கிய கட்சி. நான் சொல்வதை கேட்கவில்லை என்றால், யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது” என காட்டத்துடன் கூறினார். இதனை கேட்டுக்கொண்டு அன்புமணி ” சரி” என தலையை அசைத்துக்கொண்டிருந்தார்.
அதற்கு ராமதாஸ் ” என்னா, சரின்னா, போ அப்போ… மீண்டும் சொல்கிறேன். மாநில இளைஞர் அணித் தலைவராக முகுந்தன் நியமிக்கப்படுகிறார். எல்லோரும் கைத்தட்டுங்கப்பா” என கூற கீழே இருந்த தொண்டர்களும் கையை தட்டினார்கள்.
உடனே அன்புமணி மைக் எடுத்துக்கொண்டு ” குடும்பத்தில் இருந்து இன்னொன்ன போடு” என கூறிக்கொண்டு கோபத்தை கட்டுப்படுத்தி மைக்கை கீழே வேகமாக வைத்தார். அதன்பின் வேகமாக எழுந்த அவர் ” சென்னை பனையூரில் எனக்கு புதிதாக ஒரு அலுவலகம் ஆரம்பித்து வைத்திருக்கிறேன். அங்கு வந்து என்னை எல்லோரும் பார்க்கலாம். 4446060628 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்” என அறிவித்தார்.
இதனையடுத்து, ராமதாஸ் ” இன்னொரு அலுவலகம் திறந்துக்க, முகுந்தன் உனக்கு உதவியாக இருக்கப் போகிறார். இதை யாரும் மாற்ற முடியாது. உனக்கு விருப்பம் இல்லைனா.. விருப்பம் இல்லைனா… “அவ்வளவுதான்” … வேறு என்னா சொல்ல முடியும். “அவ்வளவு தான்” முகுந்தன்தான் இளைஞர் அணி தலைவர். நான் சொல்வதுதான். அப்படி விருப்பம் இல்லாதவர்கள் என் பேச்சை கேட்காதவர்கள் கட்சியில் இருந்து விலகி கொள்ளுங்கள்” எனவும் அழுத்தமாக ராமதாஸ் தெரிவித்தார்.