2026 தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு? அன்புமணி ராமதாஸ் அதிரடி!
வன்னியர்களுக்கு 15% இடஒதுக்கீடு அளித்தால் 2026 தேர்தலில் திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் : இன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு தலைநகரங்களில் வன்னியர்களுக்கு 10.5% உள்இடஒதுக்கீடு அளிக்காததை கண்டித்து தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக போராட்டம் நடத்தப்பட்டது.
விழுப்புரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையிலும், காஞ்சிபுரத்தில் பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது காஞ்சிபுரம் போராட்ட கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ” தமிழக முதலமைச்சர், உடனடியாக வன்னியர்களுக்கு 15% உள் ஒதுக்கீடு அளித்தால், 2026 தேர்தலில் திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம். நீங்கள் ஒரு கையெழுத்து மட்டும் போடுங்க போதும், எங்களுக்கு சீட்டு, பதவி வேணாம். இந்த சமுதாய வாக்குகள் மொத்தமும் உங்களுக்கு வாக்களிக்கும்.
ஆனால், அப்படி நீங்கள் உள்இடஒதுக்கீடு கொடுக்கவில்லை என்றால், வீடு வீடாக பிரச்சாரம் செய்வோம். வன்னியர்களுக்கு விரோதி என்று பிரச்சாரம் மேற்கொள்வோம். அடுத்த தேர்தலில் மானமுள்ள ஒரு வன்னியன் கூட வாக்களிக்க மாட்டான். அதை எப்படி செய்யணும் என்று எங்களுக்குத் தெரியும்.
இது சமூக நீதி போராட்டம். இதனை உங்கள் கட்சியில் சிலர் கொச்சைப்படுத்தி வருகிறார்கள். அதனை கூட கண்டிக்க உங்களால் முடியவில்லை. இதனை மத்திய அரசு செய்யணும்னு சொல்லிக்கிட்டு இருக்கிறார்கள். தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியதுதானே? அதில் என்ன உங்களுக்கு பயம்? இந்த சமுதாயம் இவளோ சீட்டு கேட்ருவாங்க, இந்த சமுதாயம் மாவட்ட செயலாளர் பதவி கேப்பாங்க. இந்த சமுதாயம் அது கேப்பாங்கனு பயம், அந்த கணக்கை மனதில் வைத்து தான் இன்னும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் உள்ளார்.
பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி உள்ளனர். அதனை, உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது. தெலுங்கானாவில் 27 நாட்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்துள்ளார்கள். ஆந்திரா, கர்நாடகா, பீகாரில் நடத்திம்முடித்துவிட்டார்கள். ஒடிசா, ஜார்கண்ட்டில் அடுத்து நடத்த உள்ளனர். ஆனால், சமூகநீதி என்று வசனம் பேசும் திமுக இன்னும் அதனை நடத்தவில்லை. சமூக நீதிக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லை.” என ஆவேசமாக பேசினார் பமாக தலைவர் அன்புமணி ராமதாஸ்.