ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு இனியும் அனுமதிக்கக்கூடாது – அன்புமணி
மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு இனியும் அனுமதிக்கக்கூடாது என்றும், இதுதொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உளளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், முடிவுக்கு வராத ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளை: கட்டுப்படுத்த தமிழக அரசு தயங்கும் மர்மம் என்ன? தீபஒளி திருநாளையொட்டி, லட்சக்கணக்கான மக்கள் இன்று முதல் சென்னையிலிருந்து தங்களின் சொந்த ஊருக்கு செல்லத் தயாராக இருக்கும் நிலையில், அவர்களின் தேவைகளை பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகள் பயணக் கட்டணத்தை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்த்தியுள்ளன.
சென்னையிலிருந்து நாளை மதுரை செல்வதற்கான கட்டணம் ரூ.3200, நெல்லைக்கான கட்டணம் ரூ.3400, கோவைக்கான கட்டணம் ரூ.3999 என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. தீப ஒளி திருநாளைக் கொண்டாடுவதற்காக கடன் வாங்கிக் கொண்டு சொந்த ஊர் செல்லும் மக்களை கசக்கிப் பிழியும் வகையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதும், அதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பதும் கண்டிக்கத்தக்கது.
ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பல முறை ஆணையிட்டும் கூட, அதன் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு இனியும் அனுமதிக்கக்கூடாது.
மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும், இது தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளைக் கருத்தில் கொண்டும் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்யவும், லட்சக்கணக்கில் தண்டம் விதிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுளளார்.