பாமக 35-ஆம் ஆண்டு விழா – உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அன்புமணி மேல் முறையீடு..!
பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தொடங்கி 35 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து அதனை விழாவாக நடத்த கடலூரில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பொதுக்கூட்டம் நாளை நெய்வேலி அருகே வடலூர் பேருந்து நிலைய சந்திப்புக்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதற்கு அனுமதி கேட்டு கடலூர் மாவட்ட காவல்துறையிடம் பாமக கோரிக்கை வைத்து இருந்து. ஏற்கனவே, நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அருகே பாமக போராட்டம் நடத்தி அதன் பின்னர் அது வன்முறையாக மாறிய காரணத்தால், நெய்வேலி டிஎஸ்பி பாமக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டார்.
இதனை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமக அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. அதில் கடலூர் மாவட்டத்தில் வடலூர் பேருந்து நிலைய சந்திப்புக்கு அருகே பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தலைமையில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு விசாரணையில், கட்சி கூட்டத்தை நடத்துவது அவர்களின் உரிமை என்றாலும், அதில் காவல்துறை அச்சத்தை கருத்தில் கொண்டு அனுமதி அளிக்க முடியாது என்றும். இதனால், கடலூரில் பாமக கூட்டத்தை அனுமதிக்க முடியாது என்றும் வேறு மாவட்டங்களில் வேண்டுமென்றால் காவல்துறை அனுமதியுடன் நடத்த அனுமதி என்றும் உத்தரவிட்டது. கடலூரை தவிர்த்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணிக்குள் பொதுக்கூட்டத்தை முடித்துக்கொள்ளவும் உயர்நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடலூர் மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்ததை எதிர்த்து மேல்முறையீட்டிய செய்யவுள்ளதாகவும், கடலூர் மாவட்டத்திலேயே பொதுக்கூட்டம் நடத்துவதற்கான அனுமதியை சட்ட போராட்டம் மூலம் வென்றெடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.