பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு செக் – அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 6.79 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை முன்னதாக அதிர்ச்சி தகவல் தெரிவித்திருந்தது. தமிழகத்தில் மே மாதம் 5 ஆம் தேதி முதல் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில்,கடந்த மே 31 ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது.
ஆனால்,10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 2,25,534 மாணவர்கள்,11 ஆம் வகுப்பு தேர்வை 2,58,641 மாணவர்கள்,12 ஆம் வகுப்பு தேர்வை 1,95,292 மாணவர்கள் என மொத்தம் 6,79,467 மாணவர்கள் எழுதவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்தது.
இந்நிலையில்,பொதுத்தேர்வில் பங்கேற்காத 6,79,467 மாணவர்களை மீண்டும் தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது:
“தேர்வு எழுதாத மாணவர்களை அப்படியே விட்டு விடாமல்,அவர்களை ஊக்குவிக்கும் வகையில்,தனியாக ஒரு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்துள்ளோம்.மேலும்,ஜூன் அல்லது ஜூலை அல்லது செப்டம்பரில் தேர்வு எழுதுவதாக இருந்தாலும்,மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைத்து தேர்வு எழுத வைக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ளோம்.
எனினும்,முன்னதாக மாணவர்கள் ஏன் தேர்வு எழுத வரவில்லை என்பதை கண்டறிய வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில்,கல்வித்துறை அதிகாரிகள் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்”,என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே,10,12-ஆம் வகுப்பு மாணவர்கள் 17 லட்சம் பேர் எழுதிய 1.87 கோடி விடைத்தாள் திருத்தும் பணி கடந்த வாரம் தொடங்கிய நிலையில், வரும் ஜூன் 23-ஆம் தேதி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும்,17-ஆம் தேதி 10-ம் வகுப்பு முடிவுகளும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,ஜூன் 9 ஆம் தேதி 11 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கப்படவுள்ளது.