“இது எங்கள் பிள்ளை., யாருக்கும் தத்துக்கொடுக்க மாட்டோம்” அன்பில் மகேஷ் பரபரப்பு விளக்கம்!
500 அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்துகொடுப்பதாக வரும் தகவலில் உண்மையில்லை. அப்படி ஒரு திட்டமில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
சென்னை : தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டன. அந்த நிகழ்வில், 500 அரசு பள்ளிகளை தேர்வு செய்து அதற்கு அருகே உள்ள தனியார் பள்ளிகள் மூலம் தேவையான உதவி செய்யப்போவதாக தெரிவித்தனர். இந்த முயற்சிக்கு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில், நன்றி தெரிவித்தார்.
இதனை அடுத்து, தமிழகத்தில் 500 அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகள் அமைப்பு தத்தெடுக்க போவதாக சில தகவல்கள் நேற்று வெளியாகின. இந்த தகவலில் உண்மையில்லை என தனியார் பள்ளிகள் அமைப்பு மறுத்தது. அரசு பள்ளிகளை தனியார் தத்தெடுப்பதாக வெளியான செய்திகள் குறித்து பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிருப்தியை தெரிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். ஒரு செய்தியை ஆராய்ந்து அதன் உண்மை தன்மை அறிந்து கருத்து பதிவிட வேண்டும் எனவும் தனது வருத்தத்தை பதிவு செய்தார்.
அவர் கூறுகையில், ” மாணவர்கள் கல்வியை மேம்படுத்த புதியதாக எந்த திட்டம் கொண்டு வரலாம்? என்று இன்று பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஆலோசித்தோம். பழைய அறிவிப்புகள் என்ன என்பது குறித்து முழுதாக ஆய்வு செய்தோம். இந்த துறை ஆலோசனை குறித்து முதலமைச்சரிடம் கூறுவோம். அவருடனும் துறை ரீதியில் முன்னெடுக்கப்பட்ட ஆலோசனை குறித்து கூறுவோம். ” என்று குறிப்பிட்டார்.
மேலும், ” 500 பள்ளிகளை தத்தெடுக்க போவதாக செய்திகள் வெளியான உடன் அமைச்சரோ அல்லது துறை சார்பாக பத்திரிகை செய்தி வந்துள்ளதா என்ற நம்பகதன்மையை சரிபார்க்க வேண்டும். அன்பில் மகேஷ் இதை பற்றி கூறினாரா என பார்க்க வேண்டும். தனியார் சங்கம் தத்தெடுப்பது, தாரை வார்ப்பது என்ற செய்தி வந்ததும். கண்டன அறிக்கையை வெளியிடுகிறார்கள். நீங்கள் முழுதாக தெரிந்து கொண்டு அறிக்கை விடுங்கள். நாங்களும் எங்கள் பள்ளிக்கல்வித்துறை சார்பாக வன்மையாக இதனை கண்டிக்கிறோம்.
பள்ளிக்கல்வித்துறை சார்பாக என்ன ஆலோசித்தோம் என பாருங்கள். அரசு பள்ளிகளை தரம் உயர்த்த ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ என முதலமைச்சர் ரூ.5 லட்சம் கொடுத்து ஆரம்பித்து வைத்தார். அந்த திட்டம் மூலம் இதுவரை ரூ.504 கோடி கிடைத்துள்ளது. தனியார் பள்ளி சங்கத்தினர் அன்று நடந்த நிகழ்வில் அரசு பள்ளிகளை மேம்படுத்த நிதி தருகிறோம் என கூறினார்கள். அதற்கு நான் ‘நன்றி’ என்று மட்டுமே கூறினோம்.
நமது கொள்கையை விட்டுக்கொடுத்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பெற வேண்டிய அவசியம் இல்லை என்பதை கூறியவர் நமது முதலமைச்சர். இன்றும் ரூ.500 கோடி அளவு சம்பளத்தை மாநில அரசு தான் கொடுத்து வருகிறோம். அதில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பள்ளி ஊழியர்க்ளும் அடங்கி இருக்கிறார்கள்.
மாணவர்கள் கல்வி தடைபட்டு விடக்கூடாது என அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அரசு பள்ளி தத்தெடுப்பது என வந்தவுடன் சங்கம் விளக்கத்தை கொடுக்கிறது. நான் தொலைபேசியில் தனியார் சங்கத்தினருடன் பேசினேன். அவர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு திட்டம் கொண்டு வந்திருக்கோம். இது சார்ந்த திட்டங்களுக்கு எங்களை ஊக்கப்படுத்துங்கள். நாங்கள் சொல்லும் விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்றால் விளக்கம் கேளுங்கள்.
நீங்கள் நினைப்பது போல அல்ல. பள்ளிக்கல்வித்துறை எங்கள் பிள்ளை. அவர்களை நாங்கள் வளர்த்து கொள்வோம். யாரிடமும் தத்து கொடுக்கவோ, தாரை வார்க்கவோ அவசியமில்லை என்பதை கண்டனத்துடனும், வருத்தத்தோடும் பதிவு செய்து கொள்கிறேன்.” என கூறினார்.
மேலும், CSR செயல்முறை என்பதில் பல வகை உண்டு. சிலர் அரசு பள்ளிக்கு பென்ச் போன்ற பொருட்கள் மட்டும் வேண்டுமா என அதனை மட்டும் கொடுபார்கள். சில படித்தவர்கள் நேரம் இருக்கும் போது அரசு பள்ளிகளில் பாடம் எடுக்கிறேன் எனக் கூறுவார்கள். சிலர் பணம் தருகிறோம் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என கூறுவார்கள். அப்படிதான் தனியார் பள்ளிகள் சங்கத்தினரும் கூறினார்கள். நான் நன்றி தெரிவித்தேன். மற்றபடி அவர்களிடம் ஒட்டுமொத்தமாக அரசு பள்ளிகளை தாரைவார்க்கிறோம் என கூறுவது போல இல்லை.” என அரசு பள்ளி தத்தெடுப்பு விவகாரம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.