அமைச்சரவையில் ‘முக்கிய’ மாற்றங்கள்.? செந்தில் பாலாஜி, உதயநிதிக்கு என்னென்ன பொறுப்புகள்..?
தமிழக அமைச்சரவையில் முக்கிய மாற்றம் இருக்கும் என்றும், இது தொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு என்ற செய்திகள் கடந்த சில வாரங்களாக தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிகளவு பேசப்பட்டு வருகின்றன. இது தொடர்பான அறிவிப்பு எப்போது வரும் பலரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இந்த பேச்சுகளுக்கு வலுசேர்க்கும் விதமாக, கடந்த வாரம் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவுக்கு அடுத்த நாள், திமுக மூத்த நிர்வாகிகளுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக்கு பிறகு துணை முதலமைச்சர் பதவி, அமைச்சரவை மாற்றம் குறித்த பேச்சுக்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கின. ஆனாலும் தற்போது வரையில் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகி இருந்த செந்தில் பாலாஜி, நேற்று ஜாமீனில் வெளியே வந்தார். அவர் கைதுக்கு முன்பு வரையில், தமிழ்நாடு மின்சாரத்துறை, மதுவிலக்கு துறை ஆகிய துறைகளின் அமைச்சராக பொறுப்பேற்றிருந்தார். கைதுக்கு பிறகு மின்சாரத்துறையானது, நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமியிடமும் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது, செந்தில் பாலாஜி வெளியில் வந்துவிட்டதால், மீண்டும் அவரிடம் அமைச்சர் பதவி கொடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மீண்டும், அதேபோல 2 துறைகள் கொடுக்கப்படுமா? அல்லது ஒரே ஒரு துறை மட்டும் கொடுக்கப்படுமா என இன்னும் உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால், மின்சாரத்துறை , மதுவிலக்கு துறைகள் தான் மீண்டும் கொடுக்கப்படும் என்கிறது அரசியல் வட்டாரம்.
அதேபோல, அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்றும், ஆனால், அவர் பொறுப்பில் உள்ள விளையாட்டுத் துறை மாற்றம் செய்யப்பட்டு , செய்தித்துறை போன்று வேறு துறை ஏதேனும் கொடுப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த அமைச்சரவை முக்கிய மாற்றங்கள் அடுத்த வாரம் அதாவது அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றன.