சமூக நீதியை குழிதோண்டிப் புதைக்கும் முயற்சி! திமுக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது! – ஓபிஎஸ்
மனிதவள மேலாண்மைத் துறை அரசாணை எண் 115-ஐ உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று ஓபிஎஸ் அறிக்கை.
அரசுப் பணிகளை தனியார்மயமாக்கி சமூக நீதியை குழிதோண்டிப் புதைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் திமுக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒவ்வொரு ஆண்டும் 10 இலட்சம் வேலைவாய்ப்புகள் என்ற முறையில் ஐந்தாண்டுகளில் 50 இலட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்து திமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.
இன்று இருக்கின்ற அரசுப் பணிகளை எப்படி வெளிமுகமை (Outsourcing) மூலம் மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து ஆணை பிறப்பித்திருப்பதைப் பார்க்கும்போது “உள்ளத்தில் நஞ்சும், உதட்டில் வெல்லமும்” என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. மனித வளம் தொடர்பான சீர்திருத்தங்கள் என்று நிதிநிலை அறிக்கையில் சொல்லிவிட்டு, அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக மனிதவள மேலாண்மைத் துறை மூலம் அரசாணை எண் 115 வெளியிடப்பட்டு இருக்கிறது.
இந்த ஆணையில் குழுவின் ஆய்வு வரம்புகளாக பன்முக வேலைத் திறனோடு பணியாளர்களின் ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு அமைதல், அரசின் பல்வேறு நிலைப் பணியிடங்கள், பதவிகள், பணிகள் ஆகியவற்றை திறன் அடிப்படையில் ஒப்பந்த முறையில் நிரப்புவதற்கான முறைகளை மேற்கொள்ளுதல், ‘டி’ மற்றும் ‘சி’ பிரிவு பணியிடங்களை வெளிமுகமை மூலம் நிரப்புதல், பணியாளர்களை ஒப்பந்த முறையில் நியமித்து குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவர்களின் பணிச் செயல்பாடுகளை ஆய்வு செய்து அவர்களை காலமுறை ஊதியத்தில் அமர்த்துதல் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தக் குழுவின் ஆய்வு வரம்புகளை பார்க்கும்போது அரசு இயந்திரத்தை தனியாரிடம் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு சமூகநீதிக்கு மூடுவிழா நடத்த தி.மு.க. அரசு தயாராகிவிட்டது என்பது தெள்ளத் தெளிவாகிறது. ஒரு புறம் அரசுப் பணிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் வகையில் சமூகநீதிக்கு எதிராக ஒரு குழுவை அமைத்துவிட்டு, மறுபுறம் அரசுப் பணிகளின் அனைத்து நிலைகளிலும் சமூகநீதிக் கொள்கைகளை செயல்படுத்த சட்ட வல்லுநர் குழுவை அமைத்திருப்பது முன்னுக்குப் பின் முரணானது. தி.மு.க. அரசின் இரட்டை வேடத்திற்கு மற்றுமொரு சான்று.
இன்று ஒட்டுமொத்த அரசுப் பணிகளையுமே தனியாருக்கு காவு கொடுக்கத் தயாராகிவிட்டது தி.மு.க. அரசு. சமூக நீதிக்கு சங்கு ஊதும் நடவடிக்கையில் தி.மு.க. அரசு ஈடுபட்டிருக்கிறது. ஏற்கெனவே அரசாங்கப் பணிகளில் தலையிட்டு வரும் தி.மு.க.வினர், அரசுப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால், தங்களுக்கு வேண்டியவர்களை பணியில் நிப்பதற்கும், பணியின் தரம் குறைவதற்கும், இடஒதுக்கீடு என்பதே இல்லாமல் போவதற்கும், அரசின் ரகசியங்கள் வெளியிலே செல்வதற்கும், ஊழல் பெருகுவதற்கும் வழிவகுக்கும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக அரசு வேலைவாய்ப்பு என்பதே இல்லாமல் போய்விடும் சூழ்நிலை உருவாகும்.
தி.மு.க., அரசின் இந்த நடவடிக்கை அரசுப் பணிகளில் சேர வேண்டும் என்ற ஆர்வமுடைய ஏழையெளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் கனவை சிதைப்பது போல் அமைந்துள்ளது. இதுபோன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை எல்லாம் எடுத்துவிட்டு அதை ‘திராவிட மாடல்’ என்று சொல்லிக் கொள்வது வெட்கக்கேடானது. தி.மு.க. அரசின் அரசுப் பணியாளர் விரோத நடவடிக்கைக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி மூன்றரை இலட்சம் காலிப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட இதர அமைப்புகள் மூலம் உடனடியாக நிரப்புவதற்கும், புதிதாக இரண்டு இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மனிதவள மேலாண்மைத் துறை அரசாணை எண் 115-ஐ உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.