அடடா..! ATM மெஷினில் இனி தங்கக்காசு வருமா…!
கோவை மாவட்டத்தில் முதல் முறையாக தங்கக்காசுகளைத் தரும் ATM மெஷினானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள ஃபுல்மூன் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம்,’கோல்ட் ஆன் தி கோ’ என்ற பெயரில் தங்க நாணயங்களை வழங்கும் ஏடிஎம் மெஷினை சிங்கப்பூர் பிளாசாவில் உள்ள மென்ஸ் அவென்யூவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஃபுல்மூன் எக்ஸ்போர்ட்ஸின் பங்குதாரர் எல்.எஸ். சீனிவாசன் கூறுகையில்,”கொரோனா தொற்று அதிக அளவில் பரவுவதால்,கடைகளில் நகைகளை நேரடியாக வந்துப் பார்க்க வாடிக்கையாளர்கள் தயங்குகிறார்கள்.எனவேதான்,இந்த தங்க நாணயங்களை வழங்கும் ஒரு புதுமையான ATM மெஷினை அறிமுகப்படுத்தியுள்ளோம்.இதன்மூலம் மக்கள்,பாதுகாப்பான வழியில் தங்கத்தைப் பெற முடியும்.
மேலும்,வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை ரொக்கமாகவோ அல்லது யுபிஐ,போன் பே,கூகுள் பே மற்றும் பீம் உள்ளிட்ட ஆப் மூலமாகவோ செலுத்தி BS 916 தரச் சான்றிதழுடன் கூடிய தங்க நாணயங்களை இந்த ATM மெஷினில் பெற்றுக் கொள்ளலாம்.இந்த ATM மெஷினானது தங்க நாணயங்களை ஒரு கிராம், இரண்டு கிராம், நான்கு கிராம் மற்றும் எட்டு கிராம் என்ற நான்கு பிரிவுகளில் வழங்கும்.இந்த தங்க நாணயங்களில் BIS குறி மற்றும் ஒரு QR குறியீடு உள்ளது.இதனை ஸ்கேன் செய்து நாணய உற்பத்தியாளர்களின் விவரங்களைப் பற்று தெரிந்து கொள்ளவும் முடியும்.
இதனையடுத்து,20 லட்சம் செலவில் உருவான இந்த ATM மெஷினை,கோவை மாவட்டத்தின் 20 முக்கிய பகுதிகளில் நிறுவ உள்ளோம். அதுமட்டுமல்லாமல்,இந்த ATM உரிமையை விருப்பமுள்ளவர்களுக்கு வழங்கவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்”,என்று கூறினார்.