விவசாயிகளுக்கு ஓர் அறிவிப்பு! குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டால் நிவாரணம்.. தமிழக அரசு!
குறுவை சாகுபடி தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டிருந்தால் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என வேளாண்துறை அறிவித்துள்ளது. அதன்படி, மாநில அரசின் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்படும் என வேளாண்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். காவிரியில் நீர் வரத்து குறைந்து பயிர்கள் கருகும் நிலையில், விவசாயிகள் நலன் கருதி தமிழக அரசு அறிவித்துள்ளது.
குறுவை சாகுபடிக்கு வழக்கமாக காப்பீடு செய்வதில்லை என்றபோதும் மாநில அரசு சார்பில் நிதி வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதாவது, குறுவை சாகுபடிக்கு காப்பீடு வசதி இல்லாத நிலையில் நிவாரண நிதி குறித்து வேளாண்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் இந்தாண்டு குறுவை சாகுபடியில் 10 லட்சம் ஏக்கர் பயிரிடப்பட்ட நிலையில், 2 லட்சம் ஏக்கர் அறுவடையானது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, தமிழகத்தில் பல்வேறு விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பருவ கால சாகுபடியானது வறட்சி, பருவம் தவறிய மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால் சுமார் 7 லட்சம் ஏக்கர் பரபளவில் பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனை தவிர்க்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது இழப்பீடு தொகையை இன்று காலை அறிவித்திருந்தார். அதன்படி, சம்பா பயிர் பாதிப்பு இழப்பீடு தொகையாக 560 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. அரசு பயிர் காப்பீட்டு திட்டம் 202-2023 கீழ் தொகையானது விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும். இதன் மூலம் சுமார் 7 லட்சம் விவசாயிகள் பயன்பெற உள்ளனர். இந்த நிலையில், நீரின்றி குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டிருந்தால் விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.