“பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி”… அதிமுகவுடன் கூட்டணியா? தவெக விளக்கம்!
தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என தவெக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திட்டவட்டமாக மறுத்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் தவெ.க கட்சியுடன் எந்த காட்சிகள் கூட்டணி வைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
சமீப நாட்களாக, கூட்டணி கட்சி தொடர்பான தகவல் பரவி வந்தது. அந்த தகவலின்படி, அதிமுகவுக்கு 154, தவெகவுக்கு 80 என தொகுதி பங்கீடு செய்து, 2026 தேர்தலை கூட்டாக சந்திக்க இரு கட்சிகளும் பேசி வருவதாகத் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தவெக எழுச்சியை மடைமாற்ற உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்கள் பரப்பப்படுகிறது.
அதிமுகவுடன் தவெக கூட்டணி என்ற செய்தி அடிப்படை ஆதாரமற்றது. பொய்கருத்து அடிப்படையில் பரப்பப்படும் செய்தியை மக்கள் புறக்கணிப்பார்கள். தவெகவின் எழுச்சியை மடைமாற்றும் முயற்சி இது. தவெகவை தொடர்புப்படுத்தி தவறான செய்திகளை ஊடகங்கள் வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்” எனக் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. வுடன் கூட்டணி இல்லை
2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு அஇஅதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, பிரதான தமிழ் நாளிதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைக் கொண்டு நேற்றுத் தலைப்புச் செய்தி் வெளியிட்டுள்ளது. ‘இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது’ எனவதெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி
தவெக-வின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது. தவெக தலைவர் விஜய் மாநாட்டில் தெரிவித்த நிலைப்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தோடு, நாட்டு மக்களின் பேராதரவோடு வென்று தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தவெக-வின் குறிக்கோள்.
மக்களைக் குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.