கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.. 90 சதவீத பணிகள் நிறைவு.! – அமைச்சர் சேகர்பாபு தகவல்.!
சென்னை புறநகர் பகுதியில் புதியதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இன்று புதிய காவல் நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டிருந்தார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அடுத்தடுத்து செயல்படுத்தப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை கூறினார்.
அவர் கூறுகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதியதாக மலிவு விலையில் தரமான உணவகங்கள் அமைக்க அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். விரைவில் அதற்கான பணிகள் துவங்கப்படும் என்று குறிப்பிட்டார்.
இமாச்சல் கார் விபத்து – சைதை துரைசாமி மகன் காணவில்லை!
மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 32 கடைகள் மட்டுமே அங்கீகாரம் பெற்று இருந்தன. அதற்கு 11 உரிமையாளர்கள் மட்டுமே இருந்தார்கள். அவர்களுக்கும் சலுகை அடிப்படையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதிய கடைகளை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். கோயம்பேட்டில் 300 கடைகள் எல்லாம் இல்லை.
ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் நிறுத்த கூடாது என கூறப்பட்ட விவகாரம் குறித்து வரும் புதன் கிழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அதில் அரசு சார்பில் வாதங்களை முன்வைப்போம் என்று அமைச்சர் கூறினார்.
மேலும், கோயம்பேடு 2002 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போது ஏழு ஆண்டுகள் கழித்து தான் அங்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டது. அங்கு தினம் ஒரு பிரச்சனை என செய்தித்தாளில் புகார்கள் வந்த வண்ணம் இருக்கும். சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக புகார்கள் வந்து கொண்டே இருந்தது. அங்கு கழிப்பறை வசதி கூட அப்போது ஒழுங்காக இல்லை. உணவகங்கள் இல்லை. தேனீர் விடுதி இல்லை. இவ்வாறு பல்வேறு குற்றச்சாட்டுகள் அங்கு இருந்தன.
ஆனால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஆரம்பித்து 35 நாட்களில் 90 சதவீதம் அடிப்படை வசதிகளை முழுதாக நிறைவேற்றியுள்ளோம். 20 கோடி ரூபாய் செலவில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . 70 கோடி ரூபாய் செலவீட்டில் நடைமேடை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் புதிய மேம்பாலம் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சி காலத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திட்டமிடப்பட்ட்ட போது, பருவமழையை எதிர்கொள்ள மழைநீர் வடிகால் இல்லை. ஆனால், தற்போது 1200 மீட்டர் தூரத்திற்கு புதிய மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. காலநிலை பூங்கா, நீரூற்று பூங்கா ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது என கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து அமைச்சர் சேகர்பாபு பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.