“அம்மா அவர்களின் சிலை பறவைகளின் கூடாரமாக மாறிவிட்டது” – ஓபிஎஸ் வருத்தம்…!

Default Image

முன்னதாக,ஆறு முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்களின் சிலையை பராமரிப்பதில் அரசு பாராமுகமாக நடந்து கொள்வது மிகுந்த வருத்தமளிப்பதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

மாநில உயர் கல்வி மன்ற வளாகத்திலுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஒன்பது அடி வெண்கலச் சிலையை பராமரிக்க தொடர்புடைய அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக மக்களின் மனங்களில் மறைந்தும் மறையாமல் அம்மா:

“பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தது,மாநில சுயாட்சிக்கு தொடர்ந்து குரல் கொடுத்தது. சட்டப் போராட்டத்தின் மூலம் காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தது, முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தியது, விலையில்லா அரிசித் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது, 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு சட்டப் பாதுகாப்பு அளித்தது, கட்டணமில்லாக் கல்வி உட்பட அனைத்தையும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு விலையில்லாமல் வழங்கியது,

அம்மா வளாகம்:

அன்னதானத் திட்டத்தை செயல்படுத்தியது, கல்லூரி மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியது, என எண்ணற்ற நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி, தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்குவதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து,மறைந்தும் மறையாமல் தமிழக மக்களின் மனங்களில் குடிகொண்டிருக்கும் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை கௌரவிக்கும் வகையில், சென்னை, காமராஜர் சாலை, மாநில உயர் கல்வி மன்ற வளாகத்தில் மாண்புமிகு அம்மா அவர்களின் ஒன்பது அடி உயர வெண்கலச் சிலை 28-01-2021 அன்று திறந்து வைக்கப்பட்டதோடு, அந்த வளாகத்திற்கு ‘அம்மா வளாகம்’ என்றும் பெயர் சூட்டப்பட்டது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருந்த மாண்புமிகு அம்மா அவர்களின் சிலை நல்ல முறையில் வரை பராமரிக்கப்பட்டு வந்தது. இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து பராமரிப்புப் பணிகள் அரசாங்கத்தால் சரியாக மேற்கொள்ளப்படவில்லை.

பறவைகளின் கூடாராம்:

மாண்புமிகு அம்மா அவர்களின் சிலை உயர் கல்வி மன்ற வளாகத்திற்குள் இருப்பதாலும், அதைச் சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டு பூட்டப்பட்டு இருப்பதாலும் மாநகராட்சிப் பணியாளர்களும் அதை பராமரிக்க இயலாத நிலை உருவாகியுள்ளது. மாண்புமிகு அம்மா அவர்களின் சிலை பறவைகளின் கூடாரமாக மாறிவிட்டது. இந்தச் சிலையை சுற்றி புற்கள் மண்டிப்போய் கேட்பாரற்ற நிலையில் இருப்பதோடு, அங்கு பொருத்தப்பட்டிருந்த ஒளிவிளக்குகள் எரியாமல் பழுதடைந்த நிலையில் உள்ளன.

நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை:

இந்தச் சிலையை நன்கு பராமரிக்கவும், பழுதடைந்த ஒளி விளக்குகளை மாற்றவும் பொதுப் பணித் துறை முதன்மைப் பொறியாளருக்கும், தொழில் நுட்பக் கல்வி ஆணையருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழும் சில விவரங்கள் கோரப்பட்டுள்ளன. ஆனால், எதற்கும் எந்தவிதமான பதிலும் இதுவரை பெறப்படவில்லை. அரசாங்கத்தின் சார்பிலும் மாண்புமிகு அம்மா அவர்களின் சிலையையும், அதைச் சுற்றியுள்ள இடத்தையும் பராமரிப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதாகத் தெரியவில்லை.

வருத்தம்:

ஆறு முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த மாண்புமிகு அம்மா அவர்களின் சிலையை பராமரிப்பதில் அரசு பாராமுகமாக நடந்து கொள்வது மிகுந்த வருத்தமளிக்கிறது.தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக, தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த, தமிழ்நாட்டின் தன்னிகரில்லாத் தலைவராக விளங்கிய மாண்புமிகு அம்மா அவர்களின் சிலையை பராமரிப்பதில் அரசு ஏன் மவுனமாக இருக்கிறது என்று தெரியவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இருக்கலாம் என்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் சந்தேகம் அனைத்திந்திய தொண்டர்கள் மத்தியிலும், தமிழக மக்களின் மத்தியிலும் எழுந்துள்ளது.

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, மாநில உயர் கல்வி மன்ற வளாகத்திலுள்ள மாண்புமிகு அம்மா அவர்களின் ஒன்பது அடி வெண்கலச் சிலையை பராமரிக்க தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் அல்லது சிலை பராமரிப்பை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்