‘அம்மா மினி கிளினிக்’ பெயர் மாற்றம்;இடம் பெற்ற முதல்வர் படம் – ஓபிஎஸ் கடும் கண்டனம்!

Default Image

சேலம் மாவட்டத்தில் ‘அம்மா மினி கிளினிக்’ என்ற பெயர் பலகை ‘முதலமைச்சரின் மினி கிளினிக்’ என்று மாற்றப்பட்டதற்கு யார் காரணம்? நிதி எங்கிருந்து வந்தது? என்று ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலம் மாவட்டம், நவப்பட்டி ஊராட்சி, பொது சேவை மையத்தில் இயங்கும் ‘அம்மா மினி கிளினிக்’ என்ற பெயர்ப் பலகையை எடுத்துவிட்டு, ‘முதலமைச்சரின் மினி கிளினிக்’ என்ற பெயர்ப் பலகை மாற்றப்பட்டதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக,வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

‘மாற்றத்தைத் தருவோம்’ என்று கூறிவிட்டு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைப் பொதுத் தேர்தலுக்கான முடிவுகள் வெளிவந்த இரண்டாவது நாளே முகப்பேர் பகுதியில் உள்ள அம்மா உணவகம் சூறையாடப்பட்டது, சில நாட்களுக்கு முன்பு மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் திடீரென்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் மற்றும் தி.மு.க. தலைவரின் படத்தை ஒட்டியது என்ற வரிசையில் தற்போது சேலம் மாவட்டத்தில் அம்மா மினி கிளினிக் என்ற பெயரை மாற்றியது என ஏமாற்றத்தை தந்து கொண்டிருக்கின்ற அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.

சேலம் மாவட்டம், நவப்பட்டி ஊராட்சி, பொது சேவை மையத்தில் இயங்கும் ‘அம்மா மினி கிளினிக்’ என்ற பெயர்ப் பலகையை எடுத்துவிட்டு, ‘முதலமைச்சரின் மினி கிளினிக்’ என்ற பெயர்ப் பலகை வைத்ததோடு அந்த பெயர்ப் பலகையில் தற்போதைய முதலமைச்சர் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மற்றும் தி.மு.க. தலைவரின் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டிருப்பதாக பத்திரிகையில் புகைப்படத்துடன் செய்தி வெளி
வந்துள்ளது.இது குறித்து மருத்துவ அதிகாரி ஒருவரிடம் விசாரித்த போது, அரசு விதியை மீறி வைத்துள்ள பெயர் பலகையை அகற்றக் கோரி ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும், சுகாதாரத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நவப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவரை தொடர்பு கொண்டபோது, ‘அம்மா மினி கிளினிக்’ பெயர் பலகையை மாற்றி ‘முதலமைச்சரின் மினி கிளினிக்’ என்ற பெயர்ப் பலகையை தி.மு.க.வினர் வைத்துள்ளதாகவும், இதுகுறித்து ஊராட்சியில் எந்த அனுமதியும் பெறப்படவில்லை என்றும், இதுகுறித்து ஊராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார். இதிலிருந்து தி.மு.க.வினரின் கட்டுப்பாட்டில் அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. இதன்மூலம் அரசாங்க நடவடிக்கைகளில் தி.மு.க.வினர் தலையிடுகிறார்கள் என்பதும் தெள்ளத் தெளிவாக உறுதி செய்யப்படுகிறது. பேரறிஞர் அண்ணா வழியில் ஆட்சி நடைபெறுகிறது என்று ஒருபுறம் கூறிவந்தாலும், அவருடைய கொள்கைகளுக்கு முரணான செயல்கள் தான் தி.மு.க. ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக மக்கள் நினைக்கின்றனர்.

மேற்படி இடத்தில் பெயர் பலகை மாற்றம் செய்யப்பட்டு நான்கு நாட்கள் கடந்துள்ள நிலையில், இது தொடர்பான புகார் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும், உள்ளாட்சித் துறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்ட நிலையில் பெயர்ப் பலகையை மாற்றவோ, பெயர்ப் பலகையை மாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. அரசு ஆணை இல்லாமல், அந்தத் துறை தொடர்புடைய அதிகாரிகளின் இசைவு இல்லாமல் எந்த அடிப்படையில் இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது? என்பதை அரசாங்கத்திற்கு உண்டு. அரசாங்க விளக்க வேண்டிய அலுவலகத்தில் உள்ள கடமை பெயர் பலகைகளை எந்த ஆணையும் இல்லாமல், அதிகாரிகளின் இசைவு இல்லாமல், யார் வேண்டுமானாலும் மாற்றலாம் என்றால், அங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை என்பதுதான் பொருள்.

மேற்படி இடத்தில், ‘அம்மா மினி கிளினிக்’ என்ற பெயர் பலகை ‘முதலமைச்சரின் மினி கிளினிக்’ என்று மாற்றப்பட்டதற்கு யார் காரணம்? இந்தப் பெயர் பலகை மாற்றத்திற்கான நிதி யாரால் கொடுக்கப்பட்டது? என்பதையெல்லாம் ஆராய்ந்து சட்டத்திற்கு புறம்பாக பெயர் பலகை வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவப் படத்துடன் கூடிய ‘அம்மா மினி கிளினிக்’ என்ற பெயர் பலகை மீண்டும் அங்கு பொருத்தப்பட வேண்டும் என்பதுதான் அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, பெயர் பலகை மாற்றியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், மீண்டும் மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவப் படத்துடன் கூடிய ‘அம்மா மினி கிளினிக்’ என்ற பெயர் பலகை அங்கே பொருத்தப்படவும் ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்