அமித்ஷாவின் தமிழ்நாடு வருகை ரத்து! காரணம் என்ன?
Election2024: மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் மேற்கொள்ள இருந்த பிரச்சார நிகழ்வுகள் ரத்து.
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது . இதனை முன்னிட்டு பிரதான அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் குறிப்பித்தக்க இடத்தை பிடிக்க பாஜக தலைமையிலான கூட்டணி அமைத்து தேர்தல் களமிறங்கியுள்ளது.
இந்த சூழலில் வேட்பாளர்களை ஆதரித்து பாஜக கூட்டணி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், முக்கிய தலைவர்களும் தமிழகத்தில் பரப்புரை நிகழ்வுகளில் ஈடுபட உள்ளனர். அந்தவகையில், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மற்றும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள பிரதமர் மோடி மீண்டும் ஏப்ரல் 9ம் தேதி தமிழ்நாடு வருகிறார்.
பிரதமர் வருகைக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சார நிகழ்வுகளில் தமிழ்நாடு வர உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், அமித்ஷா தமிழ்நாட்டில் மேற்கொள்ள இருந்த பிரச்சார நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் பரப்புரைக்காக இன்றிரவு தனி விமானம் மூலம் மதுரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அமித்ஷாவின் பயணம் திடிரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தொகுதிகளில் பாஜக மற்றும் கூட்டணி வேட்பளர்களை ஆதரித்து ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்க அமித்ஷா திட்டமிட்டிருந்தார். தற்போது தவிர்க்க முடியாத காரணங்களால் அமித்ஷா வருகை ரத்து செய்யப்பட்டதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.