உறுதியானது அதிமுக – பாஜக கூட்டணி! அமித்ஷா அறிவிப்பு!
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா தெரிவித்தார்.

சென்னை : தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக 4 எம்எல்ஏக்களை பெற்றது. அதனை அடுத்து பல்வேறு அரசியல் மாற்றங்களை அடுத்து 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக -பாஜக கூட்டணி முறிவுக்கு வந்தது.
இதனை அடுத்து, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ், அண்ணாமலை டெல்லி பயணம் , பாஜக மாநிலத் தலைவர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நகர்வுகளை அடுத்து நேற்று இரவு பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா சென்னை வந்தார்.
இன்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து, தற்போது பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறார். அப்போது, அந்த சந்திப்பில் அருகில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் (அடுத்த மாநிலத் தலைவர்) ஆகியோர் உடன் இருக்கின்றனர்.
அப்போது பேசிய அமித்ஷா, 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக – பாஜக கூட்டணியாக தேர்தலை சந்திக்கும் என்று தெரிவித்தார். மேலும், இப்போது யார் யாருக்கு எத்தனை தொகுதி என்பது பற்றியோ, வெற்றி பெற்ற பிறகு யார் யாருக்கு என்னென்ன பதவி என்பதெல்லாம் பின்னர் தான் ஆலோசித்து முடிவு செய்வோம். என தெரிவித்தார்.
” அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் (பாஜக) தலையிட மாட்டோம். தேசிய அளவில் பிரதமர் மோடி தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் தேர்தலில் போட்டியிட உள்ளோம். 2026-ல் எடப்பாடி தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும். தேர்தல் விஷயங்களில் நாங்கள் இணைந்து செய்லபடுவோம். ” என திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார்.