தமிழ்நாடு வந்தார் அமித் ஷா.., புதிய பாஜக தலைவர் குறித்து ஆலோசனை.!
தமிழக பாஜக தலைவரை இறுதி செய்வது, தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்டவற்றை அமித் ஷா மேற்கொள்ள உள்ளார்.

சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30 மணியளவில் சென்னை வந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம், நேற்றிரவு சென்னை வந்த அவருக்கு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள அவர், இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
அமித் ஷாவின் இந்தப் பயணம், குறிப்பாக அதிமுக உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகளுடனான கூட்டணி பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காகவே இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும், சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி, பாஜக புதிய மாநிலத் தலைவர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, இன்று மாலையில் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று செய்தியாளர்களையும் சந்திக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. அதிமுக முக்கிய நிர்வாகிகள் அவரை சந்திக்க உள்ளதால் விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பு வரலாம்.
சமீபத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து பேசியிருந்தார். அந்தச் சந்திப்பு தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, சென்னையில் நடைபெறும் அமித் ஷாவின் ஆலோசனை கூட்டத்தில், அதிமுக-பாஜக கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எட்டப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தப் பயணம் தமிழ்நாடு அரசியலில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.