வீட்டிலேயே பிறந்த குழந்தை: கடவுளாக வந்த ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர்.!
கோவை : பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சென்ற ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவரும், அந்த பெண்ணுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவம் அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் காயத்ரி. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, காயத்ரியின் உறவினர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயற்சி செய்துள்ளனர்.
ஆனால், அந்த நேரத்தில் கர்ப்பணி பெண் குழந்தையை பெற்றெடுக்கும் தருவாயின் சில நிமிடங்களை மட்டுமே எதிர்கொண்டுள்ளார். இந்த சூழலில், அவரை மருத்துவமனைக்கு அழைத்த செல்ல முடியாத இக்கெட்டான நிலையை கருத்தில் கொண்ட ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவரும், நேரத்தை விரையமாக்காமல், புத்தி கூர்மையுடன் செயல்பட்டு அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளனர்.
மருத்துவ உதவியாளரின் கைகளால் இந்த உலகத்தை பார்க்க வந்த அந்த ஆண் குழந்தை, அழுதுகொண்டே தன் ஆரோக்கியத்தையும் உறுதி செய்தது. அதனை தொடர்ந்து, அடுத்தகட்ட சிகிச்சைக்காக அந்த ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே தாய் மற்றும் சேய் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இருவரும் நலமுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்கும் நிலையில், இதற்கு காரணமாக அமைந்து கடவுள் போல் வந்த ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவரையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.