தேசிய மொழி ‘சமஸ்கிருதம்’ என்பதை அம்பேத்கர் ஆதரித்தார்.! ஆளுநர் மாளிகையில் நீதிபதி பேச்சு.!
தேசிய மொழி சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என்பதை அம்பேத்கர் ஆதரித்தார் என ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்வில் நீதிபதி பேசியுள்ளார்.
இன்று அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக ஆளுநர் மாளிகையில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உள்ளிட்ட சில முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இடஒதுக்கீடு பிடிக்காது :
நடைபெற்று முடிந்த அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் ட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் முன்னிலையில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அண்ணல் அம்பேத்கர் பற்றியும், இடஒதுக்கீடு, ஹிந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டு பேசினார். அவர் தனக்கு ஆரம்பத்தில் இடஒதுக்கீடு என்பது சுத்தமாக பிடிக்காது என கூறியது அரங்கத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
அம்பேத்கர் வாழ்க்கை :
பின்னர் இடஒதுக்கீடு பற்றி பேசுகையில், நான் பிராமண சமூகத்தில் பிறந்தவன். எனது மாணவன் ஒருவருக்கு நல்ல மதிப்பெண் இருந்தும், விருப்பப்பட்ட கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. அதே போல, பட்டியலின மாணவர் ஒருவர் குறைவான மதிப்பெண் எடுத்தும் அவருக்கு இடம் கிடைத்தது என குறிப்பிட்டார். அதன் பிறகு அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை படிக்கும் போது தான் இட ஒதுக்கீடு எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரிந்தது என பேசினார்.
இந்தி எதிர்ப்பு :
அடுத்து, அண்ணல் அம்பேத்கர், சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக கொண்டு வருவதற்கு ஆதரவு அளித்தார். என குறிப்பிட்ட நீதிபதி, சமஸ்கிருதம், இந்தி மொழிக்கு எதிரான மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டாம், அது நமது வாழ்க்கைக்கும், தொழிலுக்கும் நல்லதல்ல என குறிப்பிட்டார். மேலும், மொழி வெறி நம்மை எங்கும் கொண்டு செல்லாது. நாம் எங்கு இருக்கிறோமோ அங்கேயே நம்மை தக்க வைத்து விடும் என இந்தி, சமஸ்கிருதம் பற்றியும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசினார்.