அம்பேத்கர் உருவப்படம் விவகாரம்: சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுக – வைகோ வலியுறுத்தல்!
நீதிமன்றங்களில் டாக்டர் அம்பேத்கர் உருவப்படம் நீக்க வேண்டும் என்ற சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வைகோ வலியுறுத்தல்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் திருவள்ளுவர் மற்றும் மகாத்மா காந்தி உருவப்படங்களை தவிர மற்ற தலைவர்கள் படங்கள் இடம்பெறக்கூடாது என அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் சுற்றறிக்கை அனுப்பியது. இதில், அனைத்து நீதிமன்றங்களிலும் அம்பேத்கர் உருவப்படத்தை நீக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்றங்களில் டாக்டர் அம்பேத்கர் உருவப்படம் நீக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் சுற்றறிக்கை அனுப்பி இருப்பதைக் கண்டித்து, தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உயர்நீதிமன்றம் சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நீதிமன்றங்களில் தலைவர்களின் உருவப்படம் வைப்பது தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் புதிய கட்டுப்பாட்டை திரும்ப பெற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுபோன்று, விசிக தலைவர், தமிழக காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே, நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படத்தை அகற்றும் சுற்றறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து நீதிமன்றங்களிலும் அம்பேத்கர் புகைப்படத்தை வைக்க வலியுறுத்தி சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.