தமிழகத்தில் ஆம்பனால் ஆபத்து இல்லை – பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்
ஆம்பன் புயலால் தமிழகத்துக்கு ஆபத்து இல்லை என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நிருபுனர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார், தென்மேற்கு பருவ மழையையொட்டி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதால், அதற்கேற்ப நிவாரணம் முகாம்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வரின் உத்தரவுப்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆம்பன் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் வட மேற்கு வங்காள விரிகுடா மற்றும் மேற்கு வங்காளத்தில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் மத்திய, தெற்கு மற்றும் வடக்கு வங்காள விரிகுடாவில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும்.
இதனால் மீனவர்கள் இன்று தெற்கு, மத்திய வங்காள விரிகுடாவுக்கு செல்ல வேண்டாம் என்றும் நாளை டக்கு வங்காள விரிகுடாவுக்கு செல்லவேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆம்பன் புயலால் தமிழகத்து ஆபத்து இல்லை என்றும் இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளார். இந்திய வானிலை ஆய்வு மையத்துடன் இணைந்து புயலை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என கூறியுள்ளார். மக்களின் நலன்களுக்காக, இரவு, பகலாக தமிழக அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவே மக்கள் பாதுகாப்பான மனநிலையில் உள்ளனர் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.