“நான் வருங்கால முதலமைச்சரா?” டென்ஷனாகி விளக்கம் கொடுத்த தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்!
விஷமிகள் யாரோ போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர் என போஸ்டர் சர்ச்சைக்கு தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் விளக்கம் கொடுத்துள்ளார்.

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) முதல் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28 (இன்று) சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெறுகிறது. கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் 2000கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளார்கள். பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் அழைப்புக் கடிதம் மற்றும் தலைமைக் கழகத்தின் அடையாள அட்டையுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
முதல் பொதுக்குழு கூட்டம் இது என்பதால் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதற்கிடையில், த.வெ.க. பொதுச்செயலாளர் என். ஆனந்த், சென்னை ஈ.சி.ஆர். சாலையில் “வருங்கால முதல்வர் ஆனந்த்” என்று எழுதப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை பார்த்த பலரும் குழப்பத்தில் என்ன இப்படி ஒட்டிருக்கிறார்கள் என கேள்விகளை எழுப்பினார்கள். இது சர்ச்சையாக வெடித்த நிலையில் உடனடியாக இதற்கு என். ஆனந்த் விளக்கமும் கொடுத்தார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது “நான் த.வெ.க.வின் கோடான கோடி தொண்டர்களில் ஒருவன் மட்டுமே. இந்தக் கட்சியில் அனைவரும் சமமாக உழைப்பவர்கள், சமமான பங்களிப்பை அளிப்பவர்கள். எனவே, என்னை மட்டும் தனிப்பட்ட முறையில் உயர்த்திக் காட்டும் இது போன்ற போஸ்டர்களுக்கு எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, எனக்கு இதில் உடன்பாடும் இல்லை. இந்தப் போஸ்டர்களை வேண்டுமென்றே சில விஷமிகள் அடித்து ஒட்டியுள்ளனர்.
இதற்குப் பின்னால் எதிர்க்கட்சிகளின் சதி இருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். த.வெ.க.வின் ஒற்றுமையையும், வளர்ச்சியையும் பொறுக்க முடியாதவர்கள், கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவும், தொண்டர்களிடையே தவறான புரிதலை உருவாக்கவும் இப்படியான தந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். எங்கள் கட்சியின் தலைமை மற்றும் தொண்டர்கள் இதைப் புரிந்துகொண்டு, இது போன்ற விஷமத்தனமான செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், கட்சியின் நலனுக்காக தொடர்ந்து உழைப்பார்கள் என்று நம்புகிறேன்” எனவும் பேசி என். ஆனந்த் விளக்கம் அளித்தார்.