“எப்பொழுதும் புகழ் மணக்கும் முப்பெரும் விழா” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!

Default Image

நாளை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முப்பெரும் விழா நடைபெறுகிறது – முக ஸ்டாலின் அழைப்பு.

இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், எப்பொழுதும் புகழ் மணக்கும் முப்பெரும் விழா என்று ஆரம்பித்து, மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்ற மாபெரும் தத்துவத்தை மனித குலத்திற்கு வழங்கி, அதற்காகவே வாழ்நாள் முழுவதும் அயராது பாடுபட்டுத் திராவிட இனத்தைச் சுயமரியாதை மிக்க அறிவுச் சமுதாயமாக மாற்றியமைத்த தந்தை பெரியாரின் பிறந்தநாள் செப்டம்பர் 17. தாய்த்திருநாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தலைமகனாக விளங்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பிறந்தநாள் செப்டம்பர் 15.

தந்தை பெரியாரின் தத்துவங்களை, ஜனநாயக அரசியல் களத்தில் வென்றெடுத்திட, திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பேரியக்கத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் தோற்றுவித்த நாளும் செப்டம்பர் 17. கொள்கைகளையும் இலட்சியங்களையும் இதயத்தில் என்றும் ஏந்தி, நம் பொதுவாழ்வுப் பயணத்தைத் தொடர்ந்து நடத்திட இந்த மூன்று விழாக்களையும் இணைத்து, முப்பெரும் விழாவாக்கியவர் நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர். இந்த ஆண்டும் முப்பெரும் விழாவினை, சீரும் சிறப்புமாக நடத்தித் தர வேண்டும் எனத் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளாம் உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

ஊரடங்குக் கால விதிமுறைகளை மீறிடாமல், பாதுகாப்பு, தனிமனித இடைவெளியுடன், நாளை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முப்பெரும் விழா நடைபெறுகிறது. கழகத்தின் மாநில நிர்வாகிகள், சென்னையில் உள்ள மாவட்டச் செயலாளர்கள், பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்றிடும் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நேரடியாகப் பங்கேற்றிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கட்டிக்காத்த இந்த இயக்கத்தையும் ஏற்றிப் போற்றிப் பாராட்டிடும், முப்பெரும் விழாவினைக் கண்டு களித்திட, கருத்துகளைப் பெற்றிட, அடுத்த களத்திற்குத் தயாராகிட, கரங்குவித்து வணங்கி, அன்புடன் அழைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்