மாற்றுத் திறனாளிகளுக்கு.. மாற்று வசதி! நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!
மெரினாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு பாதையை நாளை திறப்பு வைக்கிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.
சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான நிரந்தர நடைபாதை வசதியை நாளை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறப்பு வைக்கிறார். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அறிவிப்பில், சென்னை மெரினா கடற்கரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பாதை நாளை திறந்து வைக்கப்பட உள்ளது. விரைவில் பெசன்ட் நகரிலும் சிறப்பு பாதைக்கான பணிகள் தொடங்கவுள்ளதாக கூறியுள்ளது.
மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு நடைபாதை அமைக்கப்பட வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கையை சென்னை மாநகராட்சி நிறைவேற்றியுள்ளது. சென்னை மெரினா கடற்கரைக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் படையெடுப்பது வழக்கம்.
அதேநேரத்தில், மாற்றுத்திறனாளிகள் மணல் பரப்பில் சென்று கடலை ரசிப்பதில் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். இதையடுத்து, அவர்களும் கடலை சிரமமின்றி ரசிக்கும் வகையில், சிறப்பு பாதை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது.
அதன்படி, விவேகானந்தா இல்லம் எதிரே சவுக்கு, கருவேல மரங்களைக் கொண்டு ரூபாய் 1 கோடியே 10 லட்சம் மதிப்பில், 380 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலத்தில் நிரந்தர பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்த நிலையில் நாளை சிறப்பு நடைபாதை வசதியை திறக்க மாநகராட்சி முடிவு செய்து, இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.