மாற்றுத்திறனாளி பெண் கருவை கலைக்க அனுமதி.!
- தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மனநலம் பாதித்த மாற்றுத்திறனாளி பெண்ணை பக்கத்து வீட்டுக்காரர் பலாத்காரம் செய்தார்.
- குழந்தையை பெற்று வளர்க்கும் மனநிலை எனது மகளுக்கு இல்லை . எனவே கருவை கலைக்கவும் அனுமதி வேண்டும் என மாற்றுத்திறனாளி தாய் மனு தாக்கல் செய்து இருந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் எனக்கு 17 வயதில் மனநலம் பாதித்த மாற்றுத்திறனாளி மகள் உள்ளார்.நான் வெளியில் சென்ற போது பக்கத்து வீட்டுக்காரர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் எனது மகள் 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதையெடுத்து கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன்.
அவர்கள் போக்சோ பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குழந்தையை பெற்று வளர்க்கும் மனநிலை எனது மகளுக்கு இல்லை. எனவே கருவை கலைக்கவும் , தேவையான சிகிக்சை கொடுக்கவும் எங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என கூறினார்.
இந்த மனுவை நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன் நேற்று விசாரித்தனர். அப்போது கருவை கலைக்கலாம் என டீன் பரிந்துரைத்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் கருவை கலைக்க நீதிபதி அனுமதி கொடுத்தார்.மேலும் சிசுவின் டிஎன்ஏவை பாதுகாத்து வைக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.