#BREAKING: பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு.. ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு..!
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாமகவிற்கு 23 தொகுதிகளை ஒதுக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதியை அறிவித்தார். இதில் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
மேலும்,தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதனால், அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கிவிட்டனர். இதைதொடர்ந்து, அதிமுக சார்பில் இன்று பாஜக மற்றும் பாமக உடன் தொகுதி பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், தொகுதி பங்கீடு நடந்த பேச்சுவார்த்தையில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்ட நிலையில், பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். அதில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாமகவிற்கு 23 தொகுதிகளை ஒதுக்குவதாக அறிவித்தார்.
20 ஆண்டுகளுக்கு பின்னர் சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் பாமக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. கடந்த 2001-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாமகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் 20 தொகுதிகளில் பாமக வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.