திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதி ஒதுக்கீடு!
DMK alliance : மக்களவை தேர்தலுக்கான பணியில் அனைத்து அரசியல் கட்சிகளும் விறுவிறுப்பாக செயல்பட்டு வரும் நிலையில், திமுக கூட்டணியில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு மதிமுக, விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மமக, கொங்கு நாடு மக்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் திமுக தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக டிஆர் பாலு தலைமையிலான குழு நடத்தி வருகிறது.
Read More – உதய சூரியனுக்கு “நோ”.! பம்பரம் சின்னத்தில் தான் போட்டி.! மதிமுக திட்டவட்டம்.!
இந்த சூழலில் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளுடன் மக்களவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்பட்டது. அதன்படி, தொகுதி பங்கீடு குறித்து இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில், திமுக கூட்டணியில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொகுதி பங்கீடு இறுதியானதாக கூறப்பட்டது. இன்று நண்பகல் ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் தகவல் வெளியானது. அதன்படி, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் (CPI, CPM) தலைவர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வருவதாகவும் கூறப்பட்டது.
Read More – இறுதிக்கட்டத்தை எட்டியது திமுக கூட்டணி தொகுதி பங்கீடு! இன்று ஒப்பந்தம் கையெழுத்தா?
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், எந்தெந்த தொகுதிகளில் போட்டி என பின்னர் முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது, திமுக கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை, எந்த சிக்கலையும் யாரும் ஏற்படுத்தமுடியாது. கடந்த தேர்தலை போலவே இந்த தேர்தலிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. எத்தனை தொகுதிகள் என்பதை காட்டிலும் நாட்டின் நலனே முக்கியம் என்றார்.
Read More – அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு.! இன்று விசாரணை…
இதுபோன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்குவது என உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது.எந்த தொகுதிகள் என பின்னர் அறிவிக்கப்படும்.
கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 2 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என திமுகவிடம் வலியுறுத்தினோம் என்றும் 40 தொகுதிகளிலும் எங்களது தொகுதி என்ற நினைப்போடு பணியாற்றுவோம் எனவும் கூறினார். எனவே இதுவரை திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, முஸ்லீம் லீ 1, கொமதேக 1 என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.