திமுக உடன் கூட்டணியா? பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி!

anbumani ramadoss

பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த கருத்தரங்கம் இன்று சிதம்பரத்தில் நடைபெற்றது. இதில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், மூமுக தலைவா் ஸ்ரீதா் வாண்டையாா் ஆகியோா் பங்கேற்றனர். இந்த கருத்தரங்க கூட்டத்தில், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார்.

இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், 2,000 ஆண்டுகளாக, ஜாதியை வைத்துதான் அடக்குமுறை செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். ஜாதி பார்த்து அமைச்சர் பதவி கொடுக்கும் திமுக அரசு, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மட்டும் ஏன் மறுக்கிறார்கள்? என கேள்வி எழுப்பினார்.

சமூக நீதியை நிலைநாட்ட தமிழக அரசு உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். நீண்ட காலமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தொடர்ந்து முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக சமீபத்தில் கூட முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து வலியுறுத்தி உள்ளோம்.

இருப்பினும், தொடர்ந்து தமிழக அரசு மறுத்து வருகிறது. பீகாரில் கணக்கெடுப்பு நடத்தி முடித்து, இட ஒதுக்கீடு அறிவித்துவிட்டார்கள், ஆந்திரா, ஒடிசா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், சமூகநீதியின் கோட்டை தமிழ்நாடு, தந்தை பெரியாரின் வாரிசு நாங்கள் தான் என்று கூறி வரும் திமுகவினர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயக்கம் காட்டி வருகின்றனர்.

பொன்னாடை, பூங்கொத்து வேண்டாம்.. நிதியுதவி வேண்டும்.! டிடிவி கோரிக்கை.!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரமில்லை, மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என முதலமைச்சர் தவறான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். சென்சஸ் என்பது மக்கள்தொகை கணக்கெடுப்பு, சட்டப்படி இதனை மத்திய அரசுதான் எடுக்க முடியும், மாநில அரசு எடுக்க முடியாது. ஆனால், 2008 indian statistical act-யின்படி சர்வே என்பதை மாநில அரசு எடுக்கலாம்.

இதனடிப்படையில் தான் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினார்கள், இதற்கு அம்மாநில ஐகோர்ட் ஆதரவு அளித்தது. அதேபோல் உச்சநீதிமன்றமும் எந்த தடையும் கொடுக்கவில்லை. எனவே, தமிழகத்திலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்,  எனவும் வலியுறுத்திய அவர், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் எனவும் கூறினார்.

இதனிடையே, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிடம், திமுகவுடன் கூட்டணியா?, சிதம்பரத்தில் பாமக போட்டியா? என நாடாளுமன்ற தேர்தல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், சும்மா யாராவது எதாவது சொல்லுவார்கள், எங்களது நிலைப்பாடு குறித்து நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பாமகவின் நிலைப்பாடு என்ன என்பதை விரைவில் அறிவிப்போம். சமூகநீதியை நிலைநாட்டுவதற்காக திமுக அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்தி உள்ளோம். சந்திப்பு என்பது சமூகநீதியை நிலைநாட்டவே தவிர கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை அல்ல என பதிலளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்