“அதிமுகவுடன் கூட்டணி சிறப்பாக உள்ளது”…தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேச்சு!
2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
சென்னை : இன்று தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் மாவட்டச் செயலாளர் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், மின் சாரக்கட்டணம் உயர்வைத் திரும்பப் பெற வேண்டும், தமிழக மக்களுக்காக கேப்டன் கொண்ட லட்சியத்தை நிறைவேற்றிட வேண்டும் என உட்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்கள் நிறைவேற்றிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பொதுச்செயலாளர் பிரேமலதா அதிமுகவுடனான கூட்டணி குறித்தும் தேமுதிக மாநாடு நடத்துவது பற்றித் திட்டமிட்டது குறித்தும் பேசியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர் ” நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாபெரும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளோம்.
ஜனவரி முதல் தமிழகம் முழுவதும் தே.மு.தி.க நிர்வாகிகள் மற்றும் மக்களைச் சந்திக்கும் வகையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த திட்டத்திற்கான பேச்சுவார்த்தை இப்போது நடந்து கொண்டு இருக்கிறது. விரைவில் தே.மு.தி.கவின் பிரமாண்ட மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
அதிமுகவுடன் நட்புறவுடன் நாங்கள் தொடர்கிறோம். எங்களுடைய ஒற்றுமை மற்றும் நட்புணர்வு அருமையாக இருக்கிறது. கட்சியில் விஜய பிரபாகரனுக்குப் பதவி தர வேண்டுமெனத் தொடர்ச்சியாகக் கோரிக்கை வருகிறது. அதனைப் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். இதுகுறித்து பொதுக்குழு, செயற்குழுவில் அறிவிக்க இருக்கின்றோம். ” எனவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் த.வெ.க தலைவர் விஜய்யின் அரசியல் நோக்கம் என்ன என்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த பிரேமலதா விஜயகாந்த் ” விஜய்யின் தேர்தல் வியூகம் பற்றி நீங்கள் அவரிடம் தான் கேட்கவேண்டும்.
அவருடைய நோக்கம் என்னவென்பது அவருக்கு மட்டும் தான் தெரியும். இதேபோல ஒரு செய்தியாளர்கள் சந்திப்பு வைக்கும்போது நீங்கள் இந்த கேள்வியை விஜய்யிடம் கேளுங்கள். என்னைப்பொறுத்தவரை 2026 தேர்தல் அனைத்து கட்சிகளுக்கும் சவாலான தேர்தலாக இருக்கும்” என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.