“தமிழ்நாட்டில் பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும்” – ஓபிஎஸ்
உரிமை மீட்பு குழு சார்பாக காஞ்சிபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ரஞ்சித் குமார் மற்றும் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓ.பன்னீர்செல்வத்திடம், கூட்டணி தொடர்பான கருத்துக்களை தொடர்ந்து முன்வைத்து வருகிறீர்கள், இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், தமிழ்நாட்டில் பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும். இந்தியாவை 10 ஆண்டுகாலம் சிறப்பாக வழிநடத்திய மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு. இது மக்களவை தேர்தல் என்பதால் பாஜக தலைமையில் தான் இங்கே கூட்டணி அமையும்.
ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான தேதிகள் அறிவிப்பு – மதுரை மாவட்ட ஆட்சியர்!
நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில், தேசிய கட்சிதான் டெல்லியில் ஆளும் நிலை உள்ளது. இதனால் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சியான பாஜக தலைமையில் தான் கூட்டணி அமையும். எங்களது கூட்டணியை பொறுத்திருந்து பாருங்க என்றும் கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி எத்தனை இடங்களில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய ஓபிஎஸ்-யிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. அப்போது கூறியதாவது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்பான ரகசியத்தை காலம் வரும்போது வெளியிடுவேன் என்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் எங்கள் அணிக்கு சாதகமாக தீர்ப்பு வரும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.