தமிழகம் மற்றும் கர்நாடகத்திற்கு இடையே நிலவும் காவிரி பிரச்சனை குறித்த ஒரு விரிவான அலசல்..!
காவிரியின் வரலாறு மற்றும் தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே நிலவும் பிரச்சனையை எளிமையான விதத்தில் முந்தைய பதிப்பில் படித்து அறிந்தோம். இப்பொழுது இந்த பதிப்பில் தமிழகம் மற்றும் கர்நாடகத்திற்கு இடையே நிலவும் காவிரி பிரச்சனை குறித்த ஒரு விரிவான அலசலாக காணலாம்.
பிரச்சனை தொடங்கிய ஆண்டு முதல் தற்காலம் வரையிலான நிகழ்வுகளை சுருக்கமாக படித்து அறியலாம் வாருங்கள்.!
பிரிட்டிஷ் ராஜ்ஜியம்
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கம் நிலவிய காலகட்டத்திலேயே தொடங்கி தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்குமான காவிரி பிரச்சனை. 1892 ஆம் ஆண்டு தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே காவிரி ஆறு பிரிப்பினை குறித்த மோதல் தொடங்கியது.
இந்த மோதலில் சரியான தீர்வை எட்ட முடியாத அன்றைய கால மைசூர் மாகாணமும், மெட்ராஸ் மாகாணமும் ஒரு உடன்படிக்கை செய்து கொள்வது என முடிவெடுத்தனர்.
என்ன உடன்படிக்கை?
1910 ஆம் ஆண்டு இரு மாகாணங்களும் தண்ணீரை சரியாக பிரித்துக்கொள்ள அணைகளை கட்டிக்கொள்வது என்று முடிவெடுத்தனர். என்ன தான் அணை காட்டும் முடிவு எடுத்தாலும் அதை எப்படி செயல்படுத்துவது என்ற பிரச்சனை நிலவி காலத்தை உருண்டோட செய்தது.
பின் ஒரு வழியாக 1924 ஆம் ஆண்டு இரண்டு மாகாணங்களும் கிருஷ்ண சாகர் அணையை காவிரியின் குறுக்காக கட்டிக்கொள்வது என்று முடிவெடுத்தன. ஆனால் மெட்ராஸ் பின் இந்த முடிவை மறுத்து, தான் காவிரியின் குறுக்காக மேட்டூர் அணை கட்டிக்கொள்வது என்று முடிவெடுத்தது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரி 75% நீரையும், கர்நாடகம் 23% நீரையும், எஞ்சிய நீர் கேரளாவை அடையும் என்று முடிவெடுக்கப்பட்டது.
சுதந்திரத்திற்கு பின்..
1947 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த பின், 1956 ஆம் ஆண்டு குடியரசு தின அறிவிப்புக்கு பின், மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின் மீண்டும் கர்நாடக மற்றும் தமிழக மக்கள் காவிரி பிரச்சனை குறித்த போர்க்கொடியை தூக்கி வாதிட்டுக் கொள்ள தொடங்கினர்.
1924 ஆம் ஆண்டு தமிழகம் மற்றும் கர்நாடகாவால் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கை, 50 வருட காலம் மட்டுமே நீடிக்கும் தன்மை கொண்டதாக விளங்கியது; அதன்படி 1974 ஆம் ஆண்டு இந்த உடன்படிக்கை முடிவுக்கு வந்தது.
தமிழகம் அடைந்த அதிருப்தி
1960 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் கர்நாடகா காவிரியோன் குறுக்காக ஹரங்கி, கபினி, சுவர்ணவதி,ஹேமாவதி எனும் 4 அணைகளை தமிழகத்திடம் கலந்தாலோசியாமல் கட்டியது. இதனால் இரு மாநிலங்களுக்கிடையே மீண்டும் போராட்டம் வலுத்தது; இந்த புதிய அணைகளால் தமிழக டெல்டா பகுதிகளுக்கு சரியான நீர் கிடைக்காமல் விவசாயத்தில் பெரும் பிரச்சனை நிலவியது.
இந்த பிரச்சனையை தமிழகம் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச்சென்றது; உச்ச நீதிமன்றமோ இரு மாநிலங்களும் காவிரி நீரிலிருந்து 47% நீரை சரிசம அளவில் பெற்றுக்கொள்ளலாம்; எஞ்சிய நீர் புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களுக்கு செல்லும் என்று தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பினால் தமிழகம் மேலும் அதிருப்தி அடைந்தது; தமிழகம் 1924 ஆம் ஆண்டு ஏற்படுத்திய உடன்படிக்கையின் படியே, தற்பொழுதும் தண்ணீரை பிரித்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பியது.
அடுத்து நடந்தது என்ன?
1986 ஆம் ஆண்டு, சரியான காவிரி நீர் கிடைக்காததால் விவசாயத்தில் ஏற்பட்டு வரும் நஷ்டத்தை குறித்து தமிழக டெல்டா பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தனர். அதன்படி உச்சநீதிமன்றம் CWDT எனும் காவிரி நீர் பிரிப்பினை அமைப்பு ஒன்றை அமைத்தது.
1980 மற்றும் 1990 ஆம் ஆண்டு தமிழகம் மற்றும் கர்நாடகம் பெறும் காவிரி நீர் அளவு மற்றும் அம்மாநிலங்களின் தேவையை நன்கு ஆராய்ந்த CWDT அமைப்பு, 1991 ஆம் ஆண்டு முதல் கர்நாடகா 205 tmc அளவு நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பரிந்துரை செய்தது. ஆனால் சொல்லப்பட்ட விதத்தில், சொல்லப்பட்ட அளவில் காவிரி நீர் தமிழகத்திற்கு வழங்கப்படவில்லை.
ஜெயலலிதாவின் முயற்சி
அச்சமயத்தில் தமிகத்தின் முதல்வராக இருந்த ஜெ.ஜெயலலிதா, டெல்டா விவசாயிகளின் துயர் துடைக்க, 1993 ஆம் ஆண்டு உண்ணாவிரதம் இருந்து அரசுகளின் கவனத்தை ஈர்த்தார்; மேலும் CWDT கூறப்பட்ட அளவில் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கப்படவில்லை என்பதையும் நிரூபித்தார்.
அச்சமயம் கர்நாடகாவில் பஞ்சம் நிலவியதால் தண்ணீர் திறந்துவிட இயலவில்லை என்று கூறப்பட்டது; மேலும் கர்நாடகா தங்களது விவசாய நிலப்பரப்பை அதிகப்படுத்த திட்டமிடுவதாகவும் தகவல்கள் வெளியாகின. உச்ச நீதிமன்றம் கர்நாடகத்தின் செயலை கண்டித்து, புதிய குழு ஒன்றை அமைத்தது.
CRA அமைப்பு
1998 ஆம் ஆண்டு காவிரி ஆறு அதிகார அமைப்பு அதாவது CRA என்ற பெயரில், பிரதமர் மற்றும் கேரளா, கர்நாடகா, தமிழகம், புதுச்சேரி போன்ற 4 மாநிலங்களின் முதல்வர்கள் கொண்ட அமைப்பு உருவாக்கப்பட்டு, CWDT குழுவின் பணி கண்காணிக்கப்பட்டது.
2007 ஆம் ஆண்டு CRA அமைப்பின் கண்காணிப்பின் படி, நடத்தப்பட்ட ஆய்வில் CWDT அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி காவிரி ஆற்றில் காணப்படும் 740 tmc ft நீரில், மாநிலங்கள் கீழ்க்கண்டவாறு தங்களுக்கான பகுதியை பெறும் என்று அறிக்கையில் கூறப்பட்டது.
தமிழகம் – 419 tmc ft
கர்நாடகம் – 270 tmc ft
கேரளா – 30 tmc ft
புதுச்சேரி – 7 tmc ft
மேற்கூறிய அளவில் 4 மாநிலங்களும் தங்களுக்கான காவிரி நீரை பெறும் என்று கூறி தமிழகம் மற்றும் கர்நாடகாவின் காவிரி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
பிரச்சனை முற்றுப்பெறவில்லை
என்ன தான் இத்தனை அமைப்புகளை அமைத்து, பலர் தலைமை தாங்கி ஆய்வு நடத்தி, காவிரி நீரை சரிவர பிரித்துக்கொள்ள முடிவு செய்திருந்தாலும், அது சரியாக செயல்படுத்தப்படவில்லை.
CWDT கர்நாடகாவை 192 tmc ft அளவு நீரை தமிழகத்திற்கு திறந்துவிட கூறியது; இதில் 10 tmc ft நீர் இருமாநில எல்லைப்பகுதிக்கு சென்றுவிடும் என்றும், தமிழகம் 182 tmc ft அளவு நீரைப்பெறும் என்றும் கூறப்பட்டது; ஆனால் CRA அமைப்பு கண்காணித்து அறிவித்தபடி 4 மாநிலங்களுக்கும் சரியான நீர் கிடைக்கப்பெறவில்லை.
ஜெயலலிதாவின் நடவடிக்கை
இந்த நிலையை கண்டா தமிழக முதல்வர் ஜெயலலிதா 2013 ஆம் ஆண்டு காவிரி நீரை சரிசமமாக, சரியான முறையில் பிரித்து தரக்கூடிய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரி உச்ச நீதி மன்றத்தை நாடினார். இதற்கு பலதரப்பட்ட எதிர்ப்புகளும், ஆதரவுகளும் குவிந்த வண்ணம் இருந்தன; இருப்பினும் ஜெயலலிதா தன் முடிவில் உறுதியாக நின்று போராடினார்.
இந்த தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களுக்குள் நிகழ்ந்த நூற்றுக்கணக்கான வருட பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு கிடைத்தது என்று அடுத்த பதிப்பில் பார்க்கலாம்.