தமிழகத்தில் இன்று முதல் இவைகளுக்கெல்லாம் அனுமதி – தமிழக அரசு
தமிழகத்தில் இன்று முதல் தனிக் கடைகளுக்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. இதனால் தினந்தோறும் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் நேற்றுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு மே 17 ஆம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில், மத்திய அரசு அறிவித்தபடி மேலும் 2 வாரங்களுக்கு தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்தது. இதில் சில கட்டுப்பாடுகளுடன் தளர்வு நெறிமுறைகள் தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி, இன்று முதல் சென்னையை தவிர்த்து, பிற பகுதிகளில் கீழ்கண்ட பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- குறிப்பாக நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
- 50% பணியாளர்களை கொண்டு குறைந்தபட்சமாக 20 நபர்கள் கொண்டு ஊரக மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் (ஜவுளித்துறை உட்பட ) செயல்பட அனுமதி.
- நகரப்பகுதிகளில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களை சூழ்நிலைக்கேற்ப 50% பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதி.
- மின்னணு வன்பொருள் உற்பத்தியில் 50% பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதி.
- கிராமப்புரங்களில் உள்ள நூற்பாலைகள் 50% பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதி.
- நகரப்பகுதிகளில் உள்ள தோல் பொருட்கள் மற்றும் ஆடை ஏற்றுமதிக்கான டிசைனிங் மற்றும் சாம்பிள்கள் உருவாக்க 30 % பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதி.
- IT&ITS தகவல் தொழில்நுப்ப நிறுவனத்தில் 50% குறைந்தபட்சம் 20 நபர்களை கொண்டு செயல்பட அனுமதி.
- அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமானம் மற்றும் சாலை பணிகளுக்கு அனுமதி.
- கட்டுமான பணிகளுக்கான கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி. கட்டுமான பொருட்களை எடுத்து செல்ல எந்த தடையும் இல்லை.
- தனிக் கடைகளுக்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி.
- கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தனிக் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி.
- உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம்.
- SEZ, EOU, தொழிற் நகரியங்கள் மற்றும் தொழிற்பேட்டைகள் (ஊரக நகரம்) 50 % பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதி. நகர பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகள், ஜவுளித்துறை நிறுவனங்கள் இயங்க அனுமதி இல்லை.
- மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் 33% பணியாளர்கள் கொண்டு தொடர்ந்து செயல்படும்.
- நகராட்சி, மாநகராட்சி உள்ள மால்கள் மற்றும் வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து தனிக் கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி என தமிழக அரசு அறிவித்துள்ளது.