அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்.. அன்புமணி ராமதாஸ் பரபரப்பு அறிக்கை!
ஆளுநரின் செயல் தமிழக சட்டப்பேரவையின் செயலை சிறுமைப்படுத்தும் விதமாக உள்ளது என பாமக தலைவர் விமர்சனம்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவை கடந்த அக்டோபர் மாதம் சட்டப்பேரவையில் தமிழக அரசு இயற்றியது. இதற்கு ஒப்புதல் வழங்குவதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது, சட்ட மசோதாவுக்கு விளக்கம் கேட்டு மீண்டும் தமிழக அரசுக்கே அனுப்பி வைத்தார் ஆளுநர். அதன் பிறகு, தமிழக அரசு சார்பில் விளக்கம் அளித்து திருப்பி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவுக்கு தாமதப்படுத்தாமல் விரைவில் ஒப்புதல் தர வேண்டும் என்றும் ஆளுநர் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் எனவும் முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டி வந்தனர். இந்த சமயத்தில், 4 மாதங்கள் கடந்தும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் நேற்று மீண்டும் கூடுதல் விளக்கம் கேட்டு மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார் தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி.
இதற்கு முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ஆளுநரின் செயலுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து, விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில், ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை ஆளுநர் தாமதமாக திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை ஆளுநர் தாமதமாக திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது. ஆளுநரின் செயல் தமிழக சட்டப்பேரவையின் செயலை சிறுமைப்படுத்தும் விதமாக உள்ளது. அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்டி, உடனடியாக மீண்டும் நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.