நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

நீட் தேர்வுக்கு எதிரான எங்கள் போராட்டம் எந்த வகையிலும் முடிவடையவில்லை என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

mk stalin assembly NEET

சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறது. இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிராக உள்ளது என்றும், 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் இதனை இன்னும் சரியான கவனத்தில் அரசு எடுத்துக்கொள்ளவில்லை என எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டியும் வருகிறார்கள்.

இந்த சூழலில், இன்று சட்டப்பேரவை கூடிய நிலையில் அதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ” நீட் விவகாரத்தில் வரும் 9ம் தேதி சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவித்தார். இது குறித்து அவர் பேசுகையில் ” தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு சட்டத்திற்கான ஒப்புதலை மத்திய அரசு மறுத்துள்ளது. நமது மாநில சட்டப்பேரவையில் ஒருமித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஒன்றிய அரசு கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

மத்திய அரசு நமது கோரிக்கையை நிராகரித்தாலும், தமிழ்நாடு அரசு தனது சட்டப்போராட்டத்தை தொடரும். நீட் தேர்வால் ஏழை மற்றும் எளிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி எட்டாக் கனியாகிவிட்டது. இது சமூக நீதிக்கு எதிரானது என்பதால், இதற்கு எதிரான நமது போராட்டம் நிற்காது. நீட் தேர்வுக்கு எதிரான எங்கள் போராட்டம் எந்த வகையிலும் முடிவடையவில்லை  தொடர்ந்து கொண்டே தான் இருக்கோம்.

ஏற்கனவே, திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழகத்தில் ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு இது குறித்து அனைவரிடமும் கேட்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், அனைத்துக் கட்சிக்கூட்டம் நடத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான சட்டமுன்வடிவை இரண்டாவது முறையாக நிறைவேற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இருப்பினும் மத்திய அரசு மறுத்துள்ளது.

எனவே, நீட் தேர்விற்கு விலக்கு பெறுவது தொடர்பாக ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில் அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். சட்ட வல்லுநர்களுடன் இணைந்து, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை வகுப்பதற்காக இந்தக் கூட்டம் முக்கியமானதாக இருக்கும்” எனவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்