#Alert:வலுப்பெற்ற புயல்…தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை!
வங்கக்கடலில் இரு தினங்களுக்கு முன்னர் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் மதியம் ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால்,தென்கிழக்கு வங்கக்கடலில் ‘அசானி புயல்’ உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மேலும்,தீவிர புயலாக வலுப்பெற்ற அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நிலையில்,நாளை ஆந்திரா,ஒடிசா கடற்கரையை நோக்கி மத்திய கடல் பகுதியில் நிலவும் எனவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.அதே சமயம்,வங்கக் கடலில் ‘அசானி’ புயல் உருவானதை குறிக்கும் விதமாக புதுச்சேரி, காரைக்கால்,பாம்பன், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில்,தமிழகத்தில் இன்று டெல்டா மாவட்டங்கள் உட்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அதன்படி,புதுக்கோட்டை,திருச்சி, அரியலூர்,பெரம்பலூர்,விழுப்புரம்,கள்ளக்குறிச்சி,கோவை,கடலூர், தேனி, திண்டுக்கல்,காரைக்கால்,புதுவை,திருப்பூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை,ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும்,தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இதனிடையே,தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.