#Alert:தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை;50 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக,வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
“இன்று முதல் மே 25 ஆம் தேதி வரை தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுக்கவரை:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் இருக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும்,வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும்,அதனை ஒட்டிய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
அதே சமயம்,வடக்கு கேரளா தெற்கு கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.குறிப்பாக,மன்னார் வளைகுடா,குமரிக்கடல் பகுதி மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) May 21, 2022