மதுபானம் அருந்துவதை தியாகம் செய்ய வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
வெயில் காலத்தில் ஆல்கஹால் பெரிய அளவில் உடல்நலனை பாதிக்கும். அதை அருந்துபவர்கள் கொஞ்ச காலத்திற்கு தியாகம் செய்ய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் வெப்பத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து சென்னை மாநகராட்சி மற்றும் மருத்துவத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், தாகம் எடுத்தால் தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று இல்லை. வெளியே வந்தாலே தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும், நீர்சத்து மிகுந்த சீசன் பழங்களை உட்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், இந்த வெயில் காலத்தில் ஆல்கஹால் பெரிய அளவில் உடல்நலனை பாதிக்கும். அதை அருந்துபவர்கள் கொஞ்ச காலத்திற்கு தியாகம் செய்ய வேண்டும். அதேபோல் தேநீர், காபி போன்றவற்றை கொஞ்ச காலத்திற்கு தவிர்ப்பது நல்லது என தெரிவித்துள்ளார்.