அந்தோ..! சண்முகநாதன் மறைந்துவிட்டாரே..! – கீ.வீரமணி
சண்முகநாதன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட ஆசிரியர் கே.வீரமணி.
முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் உதவியாளர் கோ. சண்முகநாதன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சற்று முன் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆசிரியர் கீ.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் தனிச் சிறப்பு மிக்க உதவியாளராக அரும் பணியாற்றிய அருமைத் தோழர் சண்முகநாதன் (வயது 80) சென்னையில் இன்று (2112.2021 மறைவுற்றார் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியைத் தந்தது.
முதலமைச்சராகக் கலைஞர் இருந்தபோதும், ஆட்சிப் பதவியில் இல்லாத காலத்திலும் சரி, அவரைவிட்டு அகலாத அணுக்கச் செயலாளராக அல்லும் பகலும் பணியாற்றியவர். கலைஞர் அவர்களின் வேகத்திற்கு ஈடு கொடுத்து உழைப்பது என்பது எளிதான ஒன்றல்ல – அதுவும் அய்ம்பதாண்டுக் காலம் பணியாற்றியது என்பது மிகப் பெரும் சாதனையே!
முதலமைச்சரின் செயலாளராக இருக்கிறோம் என்ற தன் முனைப்பு இல்லாமல், எல்லோருடனும் இன்முகத்துடனும், மதிப்புடனும் அணுகக் கூடிய பண்பாளர்.
கலைஞர் அவர்களின் மறைவு என்ற அதிர்ச்சியிலிருந்து மீள முடியாத நிலையில், சிறிது காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் காலமானார் என்பது மிகப் பெரிய துயரச் செய்தியாகும்.
அவர் பிரிவால் பெருந் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் அவர்தம் வாழ்விணையருக்கும். செல்வங்களுக்கும், குடும்பத்தினருக்கும், முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், தி.மு.க. தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.’ என தெரிவித்துள்ளார்.
அந்தோ, முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நிழலாக அரை நூற்றாண்டு சிறப்பு உதவியாளராகப் பணியாற்றிய சண்முகநாதன் மறைந்துவிட்டாரே! pic.twitter.com/LZhDUZRybI
— Asiriyar K.Veeramani (@AsiriyarKV) December 21, 2021