தொடர்ந்து 2-வது நாளாக ஏர்செல் நெட்வொர்க் சேவை முடங்கியது !
ஏர்செல் நெட்வொர்க் சேவை தொடர்ந்து 2-வது நாளாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முழுமையாக முடங்கியதால் அவதியுற்று வரும் வாடிக்கையாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நேற்று ஏர்செல் கிளை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்கள் பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை விரட்டினர்.
கோவை அவினாசி சாலையில் உள்ள ஏர்செல் மாவட்ட தலைமை அலுவலம், ஈரோட்டில் ஏர்செல் சேவை மையம் ஆகியவற்றையும் முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட இடங்கலில் 2-வது நாளாக இன்றும் ஏர்செல் சேவை முழுமையாக முடங்கியுள்ளது.
இதனிடையே ஏர்செல் நிறுவனத்தின் சிக்னல் தடைபட்ட காரணம் குறித்து அந்நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் சங்கரநாராயணன், விளக்கமளித்துள்ளார். டவர் ஏஜென்சிகளுக்கு வாடகை நிலுவை காரணமாக சிக்னல் தடைபட்டுள்ளதாகத் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏர்செல்லுக்காக செயல்பட்டு வந்த 9 ஆயிரம் டவர்களில் 6 ஆயிரத்து 500 டவர்களில் சிக்னல் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், டவர் வைத்திருக்கும் தனியார் ஏஜென்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும், ஒரு வாரத்துக்குள் சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார். ஒன்றரைக் கோடியாக இருந்த ஏர்செல் வாடிக்கையாளர் எண்ணிக்கை ஒன்றேகால் கோடியாக குறைந்துவிட்டதாகவும் சங்கரநாராயணன் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.