“உளவுத்துறை என்ன செய்கிறது.? ஸ்டாலின் தான் முழு பொறுப்பு.!” இபிஎஸ் கடும் கண்டனம்.!
சென்னை மெரினா விமானப்படை நிகழ்ச்சி குறித்து உளவுத்துறை தகவல்களை பெற்று அரசு உரிய முன்னெச்சரிக்கை எடுக்க தவறிவிட்டது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சேலம் : நேற்று சென்னை மெரினாவில் நடைபெற்ற இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சியை பார்வையிட லட்சக்கணக்கான மக்கள் கூடினர். இதில் கூட்டநெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் 7 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
விமான சாகச நிகழ்ச்சியை காண வந்து கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சி அரசியல் கட்சி தலைவர்கள், ஆளும் கட்சி மீது தங்கள் குற்றசாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “விமான சாகச நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கன மக்கள் ஒன்று கூடினர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளார். நிகழ்ச்சியை காண வந்தவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை. குடிநீர் வசதி இல்லை.
கழிப்பறை வசதி இல்லை. அதோடு நூற்றுகணக்கானோர் சிகிச்சை பெற்று வருவதாக செய்தித்தாள்கள் மூலம் தகவல்கள் கிடைத்துள்ளது. முதலமைச்சர் அறிவிப்பின் காரணமாக தான் லட்சக்கணக்கானோர் மெரினாவில் கூடியுள்ளனர். அதற்கு தக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடு செய்திருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது . அதற்கு சரியாக திட்டமிட்டு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டியது முதல்வரின் கடமை.
இந்த நிகழ்வு முதலமைச்சரின் செயலாற்ற தன்மையையும், கையாலாகாத தன்மையும் காட்டுகிறது. பல்வேறு இடங்களில் இந்த விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை கவன்மையாக கண்டிக்கிறோம். உளவுத்துறை மூலம் சரியான தகவல் பெற்று மக்களுக்கு தேவையான நடவடிக்கையை அரசு எடுத்திருக்க வேண்டும். மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. உளவுத்துறை மூலம் தகவல் பெற்று நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
அனைவரையும் வரக்கூறி அறிவிப்பு வெளியிட்டது முதலமைச்சர். அப்படியென்றால் அவர்தான் பொறுப்பு. அதனை செய்ய தவறிவிட்டனர். பல லட்சம் பேர் இந்த நிகழ்வை கண்டுகளித்தனர். சுமார் 300 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசின் அலட்சியத்தால் இது நடைபெற்றுள்ளது. திறமையற்ற அரசாங்கம் என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது. இப்படிபட்ட அவலம் வெட்கக்கேடான செயல். உளவுத்துறை எதற்கு வைச்சிருக்கீங்க.? அதனை மறைக்க என்னனென்னவோ பேசுகிறார்கள்.
விலையில்லா உயிர் போய்விட்டது. நிவாரணம் கிடைத்தால் சரியாகிவிடுமா.? இதற்கு முழு பொறுப்பு முதலமைச்சர் ஸ்டாலின் தான். அவர்தான் உளவுத்துறை மூலம் தகவல் சேகரித்து உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். முதலமைச்சர் தான் இதற்கு முழு பொறுப்பு. நீங்க மட்டும் பாதுகாப்பாக அமர்ந்து சாகச நிகழ்ச்சியை பார்த்துள்ளீர்கள். ஆனால் சாதாரண மக்கள் நிலைமை.? என்னவாயிற்று இதனை வன்மையாக கண்டிக்கிறோம் ” என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.