திருச்சியில் 144 பயணிகளை பத்திரமாக தரையிறக்கிய சூப்பர் ஹீரோஸ் இவர்கள் தான்..,
திருச்சியில் பயணிகளை பத்திரமாக தரையிறக்கிய ஏர் இந்தியா விமானத்தின் தலைமை விமானி இக்ரோம் ரிஃபாட்லி ஃபாமி ஜைனல், துணை விமானி புனேவை சேர்ந்த மைத்ரி ஷிதோல் ஆவார்.
திருச்சி : நேற்று மாலை 5.30 மணியளவில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து 144 பயணிகள் ஒரு தலைமை விமானி , ஒரு துணை விமானி, 4 விமான பணியாளர்கள் உடன் ஷார்ஜா நோக்கி புறப்பட்ட விமானம் , வானில் பறக்க துவங்குகையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லாமல் நீட்டிக் கொண்டிருந்தன.
இதனை அறிந்த விமானத்தின் தலைமை விமானி இக்ரோம் ரிஃபாட்லி ஃபாமி ஜைனல், உடனடியாக தகவலை திருச்சி விமான நிலையத்திற்கும், ஷார்ஜா விமான நிலையத்திற்கும் தெரிவித்துள்ளார் . ஷார்ஜா விமான நிலையம் அந்த விமானத்தை அந்நாட்டு விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி மறுத்துவிட்டதாக தெரிகிறது.
அதனை அடுத்து, திருச்சி விமான நிலைய இயக்குனர் கோபாலகிருஷ்ணன் , விமானம் திருச்சியில் தரையிரங்க அனுமதியளித்தார். பின்னர், விமானத்தின் தலைமை விமானி, மற்ற விமான நிலைய உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, எரிபொருள் மொத்தம் தீரும் வரையில் வானில் பறக்க தீர்மானித்தனர்.
ஏனென்றால், அதே அளவு எரிபொருளோடு தரையிறங்கினால் தீப்பற்றி ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் என முன்னெச்சரிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. பின்னர், குறிப்பிட்ட அளவு எரிபொருள் தீர்ந்த பின்னரே விமானம் பத்திரமாக திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளை விமானம் 4,5 முறை வட்டமடிக்கும் விஷயம் தெரிந்ததும் விமான நிலையம் தாண்டி பலரும் பதட்டமடைந்தனர். ஆனால் விமானத்தை இயக்கிய தலைமை விமானி இக்ரோம் ரிஃபாட்லி ஃபாமி ஜைனல் (இந்தோனியா), துணை விமானி மைத்ரி ஷிதோல் ஆகியோர் துரிதமாக, தைரியமாக சிந்தித்து செயல்பட்டு 144 பயணிகளை பத்திரமாக தரையிறக்கினர்.
சிக்கலான சமயத்திலும் சாதுர்யமாக செயல்பட்டு விமான பயணிகளை பத்திரமாக தரையிறக்கிய தலைமை விமானி , துணை விமானி, விமான நிலைய அதிகாரிகள் என அனைவரையும் பலரும் பாராட்டினர். இந்த விமானத்தில் தலைமை விமானியாக செயல்பட்ட இக்ரோம் ரிஃபாட்லி ஃபாமி ஜைனல் இந்தோனிசியா நாட்டை சேர்ந்தவர்.
துணை விமானியான மைத்ரி ஷிதோல் மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த பெண் விமானியாவர். 28 வயதான மைத்ரேயி ஷிதோலி 2019 முதல் விமானியாக பணியாற்றி வருகிறார். நியூசிலாந்து, இந்தியா என இரு நாடுகளிலும் விமானியாக பணியாற்றி வருகிறார்.
அடுத்து, விமானத்தில் பயணித்தவர்களிடம், தொடர்ந்து விமானத்தின் நிலை பற்றி அவர்கள் சோர்ந்து போகாத வண்ணம் விமானி கொடுக்கும் தகவல்களை பகிர்ந்து வந்த விமான பணியாளர்களுக்கு தலைமையாக இருந்தவர் சாகேத் திலிப் வாடானே. அடுத்து, விமானப் பணிப் பெண்களாக லாய்ஸ்ரீராம் சஞ்ஜிதா தேவி, வைஷ்ணவி சுனில் நிம்பல்கர், சாஷி சிங் ஆகியோர் பணியாற்றினார்.