டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை மத்திய அரசு கைவிடுக! அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!
ஃபெஞ்சல் புயலில் சரியாக செயல்படாத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.
சென்னை : அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணி அளவில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் சென்னை வானகரத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வந்தவுடன் தொடங்கப்பட்டது.
இந்த கூட்டத்தில், சமீபத்தில் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா, அரசியல் தலைவர்களான எஸ்.எம் கிருஷ்ணா, சீதாராம் யெச்சூரி, ஈ. வெ. கி. ச. இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து முக்கியமாக, மதுரை மேலூர் அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, டங்ஸ்டன் சுரங்கத்தை ஆரம்பத்திலேயே தடுக்க தவறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த கூட்டத்தில் மத்திய அரசு இயற்றும் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பதை தவிர்க்க வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றம். அதைப்போல, தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வை பாரபட்சமில்லாமல் வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
ஃபெஞ்சல் புயல் பாதிப்பின்போது, மக்களின் அடிப்படைத் தேவைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை என தீர்மானம் நிறைவேற்றம். தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில் விலைவாசி உயர்வு கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றம், வாக்காளர் பட்டியலில் நி்லவும் குளபடிகளை சரிசெய்து நியாயமாக தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.