நாளை அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்..!
சென்னையில் நாளை அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நாளை காலை 10.35 மணிக்கு அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்க உள்ளது. அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆய்வு செய்தனர்.
அதன்படி, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி வேலுமணி, தங்கமணி ஆகியோர் ஆய்வு செய்தனர். அதிமுக பொது குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த பிறகு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், எதிர்ப்பே இல்லாமல் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது என தெரிவித்தார். அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூடுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதிமுக- பாஜக கூட்டணி முறிவடைந்த பிறகு பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கூட்டணி மற்றும் கட்சி விதிகள் உட்பட பல விவகாரங்கள் பற்றி ஆலோசித்து அதிமுக பொது குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.