#Breaking:சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் – அதிமுக பங்கேற்காது!
சென்னை:நீட் விலக்கு தொடர்பாக இன்று நடைபெறும் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் முன்னதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார்.,மேலும்,நீட் விலக்கு மசோதா உச்சநீதிமன்ற உத்தரவிற்கு மாறாக உள்ளதாகவும், திருப்பி அனுப்புவதற்கான பிப்ரவரி 1-ம் தேதியே உரிய விளக்கத்துடன் சபாநாயகருக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டது. நீட் ரத்து மசோதாவை சட்டப்பேரவையில் மறுஆய்வு செய்ய ஆளுநர் மாளிகை அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில், நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில்,அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்து கட்சியினருடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
இந்நிலையில்,நீட் விலக்கு தொடர்பாக நடைபெறும் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என தகவல் வெளியாகியுள்ளது.நீட் விவகாரத்தில் அதிமுக எதிராக தான் இருப்பதாகவும்,ஆனால்,கடந்த அதிமுக ஆட்சியில் இதே போன்று ஒரு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி,பின்னர் குடியரசுத்தலைவருக்கு அனுப்பப்பட்ட நிலையில்,அதனை மீண்டும் தமிழக அரசுக்கே குடியரசுத்தலைவர் அனுப்பியபோது,அதிமுக அரசுக்கு எதிராக திமுக பல்வேறு அரசியல் விவகாரத்தில் ஈடுப்பட்டிருந்தார்கள் எனவும்,இதன்காரணமாகவே தற்போது நடைபெறவுள்ள சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே,இன்று நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இருந்து பாஜக விலகிக் கொள்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.