கோடநாடு பற்றி முதலில் பேசியது அதிமுக தான் – ஜெயகுமாருக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசு!
கோடநாடு குறித்து முதலில் சட்டப்பேரவையில் பேசியது அதிமுகதான் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கோடநாடு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலில் பேசியது அதிமுகதான். தற்போது கோடநாடு பற்றி பேசக்கூடாது என்றால், சட்டப்பேரவைக்கு ஏன்? கொண்டு வந்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சட்டப்பேரவையில் பேச கூடாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவது வேடிக்கையாக உள்ளது என்றும் கோடநாடு விவகாரம் ஜெயகுமாருக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அதிமுகவின் சாதாரண தொண்டர்கள் கோடநாடு சம்பவத்தில் உள்ள மர்மங்களுக்கு விடை கிடைக்குமா என்று எதிர்பார்க்கிறார்கள் என கூறினார்.
முரண்பாடுகளின் மொத்த உருவமாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கோடநாடு விவகாரம் குறித்து அளித்த பேட்டி உள்ளது. இந்த விவகாரத்தைச் சட்டப்பேரவையில் எழுப்புவதே தவறு, விதிகளே இல்லை எனக் கூறுகிறார். ஆனால், அவரே சட்டப்பேரவையில் இதனை எழுப்புவது அவரின் உரிமை என்கிறார். பதற்றத்தில் தான் சொன்னதையே மாற்றி மாற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார் என விமர்சித்தார்.
இதற்குமுன், பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டிய பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கிறது. ஆனால், மரபை மீறி நடைமுறை விதியை மீறி கோடநாடு எஸ்டேட் விவகாரத்தை விவாதிப்பதா? என கேள்வி எழுப்பி, ஜனநாயகவாதிகள் சிந்தித்து பார்க்க வேண்டும் என தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.