50% இடஒதுக்கீட்டை அதிமுக அரசு மீண்டும் அமல்படுத்த வேண்டும்
என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மருத்துவ உயர்சிறப்புப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 2016-ஆம் ஆண்டிற்கு முன்பிருந்த இடஒதுக்கீட்டு முறையில் இந்தக் கல்வியாண்டிலேயே இடங்கள் வழங்கப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“உச்சநீதிமன்றத் தீர்ப்பினை மேற்கோள்காட்டி, அரசு மருத்துவர்களுக்கு 2016க்கு முன்புவரை கடைப்பிடிக்கப்பட்ட 50% இடஒதுக்கீட்டை அதிமுக அரசு மீண்டும் அமல்படுத்த வேண்டும்”.இந்த ஆண்டு அரசு மருத்துவர்களுக்கு இந்த இடஒதுக்கீட்டுப் பலன் கிடைக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.“உள்இடஒதுக்கீடு செய்து கொள்ளும் அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கிறது” என்று 31.8.2020 அன்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ள நிலையில் – மத்திய பா.ஜ.க. அரசு போட்டுள்ள முட்டுக்கட்டையை நீக்கி அரசு மருத்துவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க இதுவரை அ.தி.மு.க. அரசு முன்வராதது – இந்த அரசு ஒவ்வொரு இட ஒதுக்கீட்டு உரிமையையும் எப்படி மத்திய பா.ஜ.க. அரசின் மிரட்டலுக்குப் பயந்து பறிகொடுத்து வருகிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
அரசு மருத்துவர்களுக்கு 2016-க்கு முன்பு வரை தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த 50 சதவிகித இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றத் தீர்ப்பினை மேற்கோள் காட்டி மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும், மருத்துவ உயர்சிறப்புப் படிப்புகளிலும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். மருத்துவ உயர்சிறப்புப் படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று மத்திய பா.ஜ.க. அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது சமூகநீதியின் குரல்வளையை நெரிக்கும் முயற்சி என்றும் – அந்த நிலைப்பாட்டை மத்திய பா.ஜ.க. அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.