ஒரு கோடி ரூபாய்க்கு அதிமுக சீட் பேரம்? கே.பி.முனுசாமி மீது ஓபிஎஸ் தரப்பு பரபரப்பு புகார்!
கொளத்தூர் தொகுதி சீட் பெற்றுத்தர கே.பி.முனுசாமி ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கிருஷ்ணமூர்த்தி புகார்.
கே.பி.முனுசாமி குறித்தான ஆடியோ:
சென்னை கிரீன்வேஸ் சாலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் நியமனத்துக்காக கே.பி.முனுசாமி பணம் கேட்ட ஆடியோவை வெளியிட்டார். அந்த ஆடியோவில், கே.பி.முனுசாமி கொளத்தூர் தொகுதி சீட் பெற்றுத்தர ஒரு கோடி ரூபாய் கேட்டு பேரம் பேசியதாகவும், முதலில் ரூ.50 லட்சம் தயார் செய்துவிட்டு, பிறகு ரூ.50 லட்சம் தருவதாக இருவரும் உரையாடும் ஆடியோ வெளியாகியுள்ளது.
வீடியோவையும் வெளியிடுவேன் – கிருஷ்ணமூர்த்தி:
பணத்தை பெற்றுக்கொள்ள தன் மகனை அனுப்புவதாக கே.பி முனுசாமி ஆடியோவில் பேசியுள்ளார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கிருஷ்ணமூர்த்தி, கேபி முனுசாமி பற்றி தொண்டர்களுக்கு தெரிய வேண்டும் என்பதால் ஆடியோவை வெளியிட்டுள்ளேன். கேபி முனுசாமி குறித்தான வீடியோவையும் வெளியிடுவேன் இன்றும் அதுமட்டுமில்லாமல், எனது ஆடியோவுக்கு பதில் கூறாவிட்டால் தங்கமணி, வேலுமணி குறித்த வீடியோவையும் வெளியிடுவேன் எனவும் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அதிமுக சீட்டுக்கு கேபி முனுசாமி பேரம்:
ஒரு அணிகள் ஒன்றாக இருந்தபோதே கேபி முனுசாமி பேரம் பேசினார். கே.பி முனுசாமி தனது சொந்த ஆதாயத்துக்காக உழைக்கிறார். நிர்வாகிகள் நியமனத்துக்காவும் ரூ.1 கோடி கேட்டு பேரம் பேசியதாகவும் புகார் தெரிவித்தார். கே.பி.முனுசாமிக்கு நிறைய பணம் கொடுத்துள்ளோம். எல்லாரிடமும் பணம் வாங்கி கொண்டு எம்எல்ஏ சீட் பெற்று தந்துள்ளார். அதில், சிலர் எம்எல்ஏவாகவும் ஆகியுள்ளனர். மேலும், என்னுடைய வளர்ச்சியை தடுத்த நிறுத்தும் வேலையை கே.பி.முனுசாமி செய்தார் என்றும் குற்றசாட்டியுள்ளார்.
பொன்னையன் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்ததாக கே.பி.முனுசாமி குறித்தான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நேரத்தில் அவதூறு, பொய் புகார்களை பரப்புவதே ஓபிஎஸ் தரப்பின் வேலையாக உள்ளது என இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.