#Justnow:அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை – உயர்நீதிமன்றம் இன்று விசாரணை!
அதிமுகவின் பொதுக்குழு,செயற்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில்,கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்க கோரி ராம்குமார் ஆதித்தன்,சுரேன்,கேசி பழனிசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடுத்தனர்.அதில்,கட்சியில் இருந்து உறுப்பினர்களை நீக்கவும்,புதிதாக பதவிகளில் நியமிக்கவும் தடை விதிக்க கோரிக்கை விடுத்தனர்.
குறிப்பாக,முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்ட நிலையில்,இது கட்சி விதிக்கு எதிரானது.எனவே, ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் தந்து நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும்,பொதுக்குழு,செயற்குழு கூட்டங்களை ஓபிஎஸ்,இபிஎஸ் நடத்த தடை விதிக்கவும் மனுவில் வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில்,இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கவுள்ளது.அதே சமயம்,அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி சூரிய மூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவையும் அவசர வழக்காக சென்னை உரிமையியல் நீதிமன்றம் இன்று விசாரணை செய்கிறது.